நான் உங்கள் வீட்டுப் பிள்ளை -இன்று எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள்

பிறந்த தேதி: ஜனவரி17, 1917
பிறந்த இடம்: நாவலப்பிட்டி, கண்டி, இலங்கைஇறந்த தேதி: டிசம்பர்24, 1987
தொழில்: நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதிகுடியுரிமை: இந்தியா

இன்று எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள். தமிழகத்தில் வேறு எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத அன்பு, எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலத்திலும், மறைந்த பிறகும் நிலைத்து நிற்கிறது. தமிழகத்தில் அவர் கொண்டு வந்த பல திட்டங்கள் இன்றும் போற்றப்படுகின்றன.

‘நான் ஆணையிட்டால்… அது நடந்துவிட்டால்… இந்த ஏழைகள் வேதனைப்பட மாட்டார்!’ இந்தப் பாடலைக் கேட்காதவர்கள் தமிழ்நாட்டில் மிகக்குறைவு. தமிழகத்தில் வேறு எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத அன்பு, எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலத்திலும், மறைந்த பிறகும் நிலைத்து நிற்கிறது. தமிழகத்தில் அவர் கொண்டு வந்த பல திட்டங்கள் இன்றும் போற்றப்படுகின்றன. அவர்தான் தமிழக மக்களால் புரட்சித் தலைவர், இதயக்கனி, வாத்தியார் என அழைக்கப்படும் எம்.ஜி.ஆர். இன்று எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள்.

மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் என்பதின் சுருக்கமாக எம்.ஜி.ஆர் என அழைக்கப்பட்ட இவரது பெற்றோருக்குப் பூர்வீகம் கேரளம் என்றபோதும் சில காரணங்களுக்காக அவர்கள் இலங்கையில் உள்ள கண்டிக்குக் குடிபெயர்ந்தனர். 5 வயதில் தந்தையை இழந்து, படிப்பைத் தொடரமுடியாமல், தன் அண்ணனுடன் சென்னைக்கு வேலைக்காக வருகிறார்.

தாயை விட்டுப் பிரிந்த சோகத்தை வெளிகாட்ட முடியாத வகையில் வறுமை அவர்களை வாட்டுகிறது. அங்கு தன் அண்ணனுடன் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சில ஆண்டுகள் அப்படியே நகர்கின்றன. 1935-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அவருக்கு அறிமுகம் கிடைக்கிறது. அதன்பிறகு சினிமாவில் அவர் தொட்ட உச்சம் யாரும் அடைய முடியாதது.


1936-ம் ஆண்டில் ‘சதிலீலாவதி’ என்னும் படத்தில் துணை நடிகருக்கான வாய்ப்பு கிடைத்தது. நான்கு வருடங்கள் கழித்து,1940-ம் ஆண்டில் ‘இராஜகுமாரி’ என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமானார் எம்.ஜி.ஆர்.

தான் கால் பதித்த முதல் படத்திலிருந்து 20 ஆண்டுகளாக மக்களைத் தன் ரசிகர்களாக வைத்திருந்தது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மக்களைத் தன் நடிப்பாலும் துடிப்பாலும் கட்டி வைத்திருந்தவர். எத்தனையோ சண்டைக் காட்சிகள், பாடல்கள், தனித்துவமான நடன அசைவுகள், கருத்துகள் என அனைத்தையும் கொண்டு தமிழ்நாட்டு மக்களை ரசிக்கச் செய்தவர். எம்.ஜி.ஆர் ஹிட்ஸ் பாடல்களைப் பலரும் தங்களின் தொலைபேசியில் இன்றும் பதிந்து வைத்துள்ளனர்.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘திருடாதே தம்பி திருடாதே’ போன்ற பல பாடல்களில் தத்துவங்களைப் பேசினார் எம்.ஜி.ஆர். இப்படிச் சாதாரண கருத்துகளைத் திரையில் பேசிய எம்.ஜி.ஆர் தன் படங்களில் அரசியலைப் பேசவும் காலம் வந்தது. 1953-ம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அதற்குப் பிறகு, தன் படங்களில் திராவிடக் கொள்கைகளையும் அண்ணாவின் தலைமையையும் முன்வைத்து பாடல்களையும் வசனங்களையும் ஒலிக்கச் செய்தார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

  • 1960ல், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இந்தியாவின் ‘பத்மஸ்ரீ விருதுக்காகத்’ தேர்வு செய்யப்பட்டார்.  ஆனால், அவர் அரசாங்கத்தின் பற்றற்ற நடத்தையின் காரணமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். ஏனென்றால், விருதில் பாரம்பரிய ஹிந்தி வார்த்தைகளுக்கு பதிலாக தனது தாய்மொழியான தமிழில் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.
  • ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக, தனது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 1972ல், எம்.ஜி.ஆர் பெற்றார்.
  • சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.
  • தமிழ்நாட்டின் சமுதாயத்தின் நன்மைக்காக அவருடைய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவர் இறந்த பிறகு 1988ல் ‘பாரத ரத்னா விருதை’ வழங்கப்பட்டது.


20 ஆண்டுகளாகத் தி.மு.க-வில் இருந்த எம்.ஜி.ஆர், தனியாக அ.தி.மு.க என்னும் கட்சியைத் தொடங்கினார். இந்த விலகலுக்குப் பின், அவருக்கும் கருணாநிதிக்கும் இடையிலான மோதல் காரணமாக அமைந்தது. திரைப்படங்கள் வாயிலாக கதாநாயகனாக இருந்த எம்.ஜி.ஆர், அரசியலின் வாயிலாக நிஜ நாயகனாக மக்களிடம் வலம் வந்தார். தனியாகக் கட்சி தொடங்கிய 5 வருடத்திலேயே ஆட்சியைப் பிடித்தார். தொடர்ந்து பத்தாண்டுகளுக்குத் தமிழகத்தை ஆட்சி செய்தார்.

முதல்முறை களத்துக்கு வந்த கதாநாயகனை மக்கள் நிஜ நாயகனாக மாற்றினார்கள். தனக்கென ஒரு பிம்பத்தைக் கட்டமைப்பதில், எம்.ஜி.ஆர் தனி அக்கறை கொண்டவர். அவர் தலையில் அணிந்த தொப்பி, எப்போதும் போட்டிருக்கும் கண்ணாடி, ஏழைகளின் மகனாகத் தன்னை முன்னிறுத்துவது என எம்.ஜி.ஆர் தன் பிம்பத்தை வெளிக்காட்டுவதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார்.

அவர் ஆட்சியில் இருந்தபோது பல திட்டங்கள் தொடங்கியும் விரிவுபடுத்தியும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொண்டு வந்தபோதும், அடுத்த முறை ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க இதை விரிவுபடுத்தியதில் பெரும் பங்காற்றியது. நியாய விலைக் கடைகளைக் கொண்டுவந்து அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்களை மக்களுக்கு எளிதில் கிடைக்க வைத்தது.

காமராஜர் ஏழைக் குழந்தைகளைப் பள்ளிக்கு வர ஒரு முயற்சியாக மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார். அதை விரிவுபடுத்தி, சத்துணவுத் திட்டமாக மாற்றினார் எம்.ஜி.ஆர். நாள்தோறும் அட்டவணைப்படி முட்டை, காய்கறி வகைகள் என சத்தான உணவு சமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. ஐந்து வயது நிரம்பிய ஏழைக் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால்தான் உணவு கிடைக்கும்.

ஆனால், ஐந்து வயது நிரம்பாத குழந்தைகளுக்கு உணவளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டம் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டது. திருமணமாகும் ஏழைப் பெண்களுக்குத் ‘தாலிக்குத் தங்கம்’ கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். தங்கள் வீட்டுப் பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய்மார்களுக்கு உதவும் வகையில், மாதம்தோறும் அவர்களுக்கு உதவித் தொகை தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீடு சதவிகிதம் அதிகமாக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கான 31மூ இட ஒதுக்கீடு, 50மூ ஆக உயர்ந்தது. தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 18மூ சேர்த்து, மொத்தம் 68மூ இட ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. இந்திய மாநிலங்களிலேயே அதிகமான இட ஒதுக்கீடு உள்ள மாநிலமாகத் தமிழகம் இருந்தது.


இப்படியான பல்வேறு திட்டங்களைத் தந்து எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழ்நாட்டின் முக்கியமான தலைவராக மாறினார். எம்.ஜி.ஆர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், தமிழக அரசியல் வரலாற்றிலும், தமிழக மக்களின் மனதிலும் அவருக்கென்று தனி இடம் இப்போதும் இருக்கிறது!

காலவரிசை

1917 : எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஜனவரி ம் தேதி 17 பிறந்தார். 1936 : தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
1947 : அவரின் முதல் வெற்றிப்படமான ‘ராஜகுமாரி’ வெளியானது.
1953 : அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார்.
1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனராக மாறினார்.
1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்து விட்டார்.
1962 : மாநில சட்ட மன்றத்தின் உறுப்பினரானார்.
1967 : தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
1967: எம். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார்.
1969 : திமுக பொருளாளராக மாறினார்.
1972 : தனது சொந்த அரசியல் கட்சியான, அ.தி.மு.கவை உருவாக்கினார்.
1972 : ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக தேசிய விருதை வென்றார்.
1977 : முதல் முறையாகவும், மூன்று முறை தொடர்ந்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.
1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்..
1987 : டிசம்பர் 24ஆம் தேதி,1987ல் இறந்தார்.
1988 : இறப்பிற்கு பின், பாரத ரத்னா விருதை அரசு அவருக்கு வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *