தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவான தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளராக செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜை நீக்கி அந்த இடத்துக்கு திருமதி. வயலட் மேரி எனும் பெண் ஆளுமை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் மற்றும் இவரது நிலைப்பாடு பற்றி உரையாடியபோது அவர்’ எம்முடன் பகிர்ந்துக்கொண்ட விடயங்கள் வாசகர்களுக்காக…
கேள்வி: உங்களது புதிய பதவிக்கு தமிழனின் வாழ்த்துகள். உங்களது குடும்ப பின்னணி கல்வி, தொழில் அனுபவங்கள் பற்றி கூறுங்களேன்…

பதில் : பொகவந்தலாவை, பெட்ரொசோ தோட்டத்தில் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவள் நான். கத்தோலிக்க குடும்பமான நாங்கள் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். எனது உடன்பிறப்புகளில் ஒரு மூத்த சகோதரியும் இளைய சகோதரனும் தவிர ஏனையோர் இறந்து விட்டனர். இளைய சகோதரரான அருட்தந்தை பெனி கத்தோலிக்க திருச்சபையில் மதகுருவாக பணியாற்றுகிறார். அவர் சமூக துறைசார்ந்த கத்தோலிக்க மற்ற இயக்க செயற்பாட்டளரும் கவிஞரும் ஆவார். அவர் இந்தியாவில் புலமைப் பரிசில் பெற்று கல்வி கற்ற காலத்தில் மலையகம்சார்ந்த பல கவிதைகளை எழுதி ஒரு தொகுப்பினையும் வெளியிட்டுள்ளார்.
எனது ஆரம்பகல்வியை பெட்ரசோ தோட்டப் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை பொகவந்தலாவை ஹொலி ரோசரி கல்லூரியிலும் உயர்தர கல்வியை ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலும் கற்றேன். அதனைத் தொடர்ந்து அஸீஸ் தலைமையில் இயங்கிய ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸில் இணைந்தேன்.
அப்போது மனோ கணேசனின் தந்தை வி.பி.கணேசனும் அதே சங்கத்தில்தான் இருந்தார். அப்போது புலமைப் பரிசில் வாய்ப்பு பெற்று சோவியத் ரஷ்யாவின் ‘ரத்தொஸ்’ எனும் தொழிநுட்ப கல்லூரியில் 1981 முதல் 1986 வரையான ஐந்து ஆண்டுகாலம் படித்தேன்.
ரஷ்ய மொழியில் கற்றிருந்ததனால் அதனைக் கொண்டு இலங்கையில் முறையான ஒரு தொழிலுக்குச் செல்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. எனினும் பண்டாரவளையில் ஓராண்டுகாலம் கணிணி கல்வியையும் பெற்றுக் கொண்டேன்.
மறைக்கல்வி டிப்ளோமா கல்வியை நிறைவு செய்து இருந்ததனாலும் கத்தோலிக்க பின்னணி மிக்க குடும்பத்தில் வளர்ந்ததனாலும் கடந்த 30 ஆண்டு காலமாக பொகவந்தலாவை பிரதேச பாடசாலைகளில் கத்தோலிக்க மறைக் கல்வி ஆசிரியராக பணியாற்றிவருகிறேன்.

அரசியல் தொழிற்சங்க ஈடுபாடு எப்படி வந்தது? எப்போது தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்தீர்கள் ?
எங்கள் குடும்பமே சமூக சேவையில் ஆர்வம் மிக்கவர்கள். ஆரம்பத்தில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசில் ஈடுபட்டு வந்தாலும் அஸீஸ் மறைவுக்கு பின்னர் அதன் தொடர்புகள் இல்லாமல் போனது. நானும் மறைக்கல்வி ஆசிரியத் தொழிலை செய்து கொண்டு இருந்துவிட்டேன்.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக பொதுச் செயலாளர் பி. ஏ. காதர் அதில் இருந்து விலகி ‘தொழிலாளர் முன்னணி’ எனும் அமைப்பை உருவாக்கி செயற்பட்ட காலத்தில் அவரோடு இணைந்து செயற்பட்ட அருளப்பன் அவர்களை குடும்ப நண்பராக அறிவேன். எனவே அவருடன் இணைந்து தொழிற்சங்கத்தில் இணைந்து பணியாற்றினேன்.
2007 ஆம் ஆண்டு அருளப்பன் அவர்களுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தில் நானும் இணைந்து கொண்டேன். அப்போதுமுதல் தேசிய சபை, நிறைவேற்று சபை , நிர்வாக சபை ஊடாக பதவிகளைப் பெற்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர்களில் ஒருவராக செயற்பட்டேன்.. மகளிர் அணி செயலாளராகவும் பதவி வகித்தேன். இப்போது தொழிலாளர் தேசிய முன்னணி எனும் அரசியல் கட்சியின் பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.
இந்தப் பொறுப்பினை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் ?
மிகப் பொறுப்பு வாய்ந்த பதவி. எமது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் வகித்த இத்தகைய பொறுப்பான பதவிக்கு என்னை நியமித்த எமது தலைவர் முன்னாள அமைச்சர் திகாம்பரம் உள்ளிட்ட மத்தியகுழுவுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
நீங்கள் இந்தப் பதவியைப் பெற்று இருக்கும் வேளை முன்னாள் செயலாளர் நீக்கப்பட்டமை சர்ச்சைக்குரிய ஒன்றாகப் பேசப்படுகிறதே இது பற்றி….
ஆம்! அவரது பதவி நீக்கம் சர்ச்சையாகப் பேசப்பட்டாலும் என்னை அந்த இடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டமைக்கு அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து வாழ்த்தினார். ஊடகங்களிலும் வாழ்த்துச் செய்தி எழுதி இருந்தார்.
இப்போது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி நிரந்தமானதா அல்லது தற்காலிகமானதா ?
எதிர்பாராதது. நான் இந்தப் பதவியில் அமர்த்தப்படுவேன் என நினைக்கவில்லை. எனது அனுபவம் கல்வி துணிவு அடிப்படையில் என்னை அந்த இடத்திற்கு தலைவர் பரிந்துரைத்து இருக்கலாம் என நினைக்கிறேன். முன்னாள் பொதுச் செயலாளராக செயற்பட்ட திலகராஜின் இடத்தை நிரப்பும் பெரும் பொறுப்பு எனக்கு உண்டு.
பொறுப்பை ஏற்ற நேரமே சர்ச்சையும் எழுந்துள்ளதால் எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில் குழப்பம் இருப்பது உண்மைதான். கட்சிக்கு புதிய யாப்பு ஒன்றை உருவாக்க பிரேரிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவுக்கு எமது பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதயகுமார் தலைமை தாங்குகிறார். அவரதும் வழிகாட்டலுடன் முன்செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு.
ஒரு பெண் எனும் நிலையில் இருந்து உங்களது புதிய பதவியை எவ்வாறு பார்க்கிறீர்கள?
மலையகத்தில் பெண்கள் தொழிற்சங்க மாவட்டத் தலைவி எனும் பதவிக்கு மேல் வருவது அபூர்வம். பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபடுவதில் உள்ள சிக்கல்களை நான் நன்கறிவேன். இருந்தாலும் தொழிலாளர் தேசிய சங்கத்தில் உப தலைவராகவும் மகளிர் அணித்தலைவியாகவும் செயற்பட்ட அனுபவம் எனக்கு கைகொடுக்கும் என நினைக்கிறேன்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சிக்கு பொதுச் செயலாளராக அனுசா சிவராஜா செயற்பட்டார். அவரது தந்தை அண்ணாமலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். சாந்தினி சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணி தலைவரானார் அவரது கணவர் முன்னாள் அமைச்சர். அவர்களது மகள் அனுசா சந்திரசேகரன் அந்த முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளராக செயற்பட்டார். இப்போது புதிய தொழிற்சங்கமும் கட்சியும் கூட தொடங்கி உள்ளார். இவர்களுக்கு எல்லாம் இருந்த குடும்ப பின்புலம் எனக்கு இல்லை.
நான் சாதாரண தோட்டத் தொழிலாளியின் பிள்ளை. ஆனாலும் எனக்கு ஆற்றல் இருக்கிறது என நினைக்கிறேன். வரும் சவால்களை எதிர்கொண்டு தானே ஆகவேண்டும்.
நன்றி – அலசல்