‘ஜனங்களின் கலைஞனான’ விவேக்

தன்னை கீழே இறக்கிக் கொண்டு சுயபகடியின் மூலம் மக்களைச் சிரிக்க வைப்பது ஒரு வகை. இந்தப் பாணியின் உச்சம் என்று வடிவேலுவைச் சொல்லலாம். ஆனால் தன்னை சற்று மேலே நிறுத்திக் கொண்டு உபதேச பாணியில் நகைச்சுவை செய்வது இன்னொரு வகை.

“உலக அளவில் பார்க்கும்போது தமிழ் சினிமாவில்தான் நகைச்சுவை நடிகர்கள் மிகவும் அதிகம்” என்று இயக்குநர் மகேந்திரன் ஒருமுறை வியந்து சொன்னார். யோசித்துப் பார்த்தால் உண்மைதான் என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு விதவிதமான நகைச்சுவைத் திறமைகளைக் கொண்ட ஒரு பெரிய பட்டியல் தமிழ் சினிமாவில்தான் இருக்கிறது.

எம்.ஆர்.ராதா, பாலையா, வி.கே.ராமசாமி, தேங்காய் ஸ்ரீனிவாசன் என்று தனித்துவமான உடல்மொழியை, பாணியைக் கொண்ட ஏராளமான நகைச்சுவை நட்சத்திரங்கள் தமிழில் கலக்கியிருக்கிறார்கள். இவர்களின் பிரத்யேக பாணியை மற்றவர்கள் நகலெடுப்பது கூட சிரமம்.

இந்த நெடிய வரிசையில் குறிப்பிடத்தக்கவராக நடிகர் விவேக்கை சொல்ல முடியும். எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் சிலர் மட்டுமே தங்களின் திறமையால் முன்னணிக்கு வந்து மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெறுகிறார்கள். விவேக் அப்படிப்பட்டவர்களில் அரிதானவர்.


சமூக விழிப்புணர்வுச் செய்திகள், சிந்தனைகள் போன்றவற்றை நகைச்சுவை கலந்து இவர் திரைப்படத்தில் சொல்லும்போது அது பாமர மக்களுக்கும் எளிதாக சென்று சேருகிறது. இந்தப் பாணியை திறம்பட உபயோகித்த முன்னோடி என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனைச் சொல்லலாம். இதே பாணியை நவீனம் கலந்து திறம்பட பயன்படுத்தியதால் ‘சின்ன கலைவாணர்’ என்கிற அடைமொழி விவேக்கிற்கு கச்சிதமாகவே பொருந்துகிறது.

ஆழமான பகுத்தறிவு சிந்தனைகளை எளிய மக்களுக்கும் புரியும்படியாக எளிமையான மொழியில் பரப்புரை செய்தார் பெரியார். இது நேரடியான ஒப்பீடு இல்லையென்றாலும்கூட பெரியார் அரசியலில் செய்த அதே பகுத்தறிவு பரப்புரையை வெகுசன சினிமாவின் எல்லைக்குள் செய்து சாதித்தவராக விவேக்கை குறிப்பிட முடியும்.

“அடப்பாவி… ஒரு லாரில நூத்துக்கணக்கான ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு… அதுல ஓடாத வண்டியாடா.. ஒரு எலுமிச்சம்பழத்துல ஓடப்போகுது’ என்று போகிறபோக்கில் அவர் சொன்ன நகைச்சுவை வசனம் ஓர் உதாரணம். இப்படியாக இன்றைக்கும் நம் நினைவில் நிற்கக்கூடிய பல கூர்மையான வசனங்களின் மூலம் பகுத்தறிவின் பாதையில் ரசிகர்களை யோசிக்க வைத்தவர் இந்த சின்னk கலைவாணர்.

நல்ல சிரிப்போடு சிறந்த சிந்தனைகளையும் உறுத்தாமல் கலந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்ததில் விவேக்கின் பாணி தனித்துவமானது. விவேக்கின் மறைவுச் செய்தியை இன்று காலை நாம் அறிய நேர்ந்த போது அவருக்கு வயது 59 என்கிற தகவல் பலருக்கு வியப்பூட்டியிருக்கும். ‘வயசை அதிகமாப் போட்டுட்டாங்களோ?!” என்று பலர் நினைத்திருக்கக்கூடும். அந்த அளவிற்கு தன் தோற்றத்தையும் நகைச்சுவையையும் தொடர்ந்து இளமையாகவே வைத்திருந்தார் விவேக். இந்தக் காரணத்தினாலேயே அவரது திடீர் மரணத்தை நம்மால் சட்டென்று ஜீரணிக்க முடியவில்லை.

விவேக்… வெற்றிடத்தை நிரப்பியவர், எம்.ஆர்.ராதாவின் உரையாடல் நகைச்சுவையில் வெற்றிகண்டவர்! #RIPVivek
சமூக விழிப்புணர்வுச் செய்திகளை திரைப்படத்தில் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல விஷயங்களில் பின்பற்றி முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் விவேக். மரம் நடுவது, இயற்கையைக் காப்பது உள்ளிட்ட சுற்றுச் சூழல் விஷயங்களில் ஒரு தனிநபர் இயக்கமாக அவர் காட்டிய உண்மையான ஆர்வமும் தொடர்ந்து செய்த பரப்புரைகளும் பாராட்டத்தக்கது. இந்த நோக்கில் திரையில் காமெடியன் என்பதைத் தாண்டி ஒரு ஹீரோவாகவே நிஜத்தில் திகழ்ந்தார் என்று சொல்லலாம்.

அவர் கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியும் சமூக விழிப்புணர்வு தொடர்பானதே. கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களுக்கு இருக்கும் தயக்கங்களை உடைப்பதற்காக சில பிரபலங்கள் தடுப்பூசியைப் போட்டு முன்னுதாரணமாக நின்றார்கள். அந்த வரிசையில் நேற்றுமுன்தினம் இணைந்தார் விவேக்.

ஆனால், சமூக விழிப்புணர்வை மக்களிடம் பரப்புவதற்காக தம் வாழ்நாள் முழுவதும் இயங்கிய ஒரு மனிதனின் மரணச் செய்தியானது, அதற்கு எதிரான திசையில் சிக்கியதை துரதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். விவேக்கின் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்பதை மருத்துவ வட்டாரங்களும் ஊடகங்களும் தொடர்ந்து சொல்லி அறிவுறுத்துவதை மட்டுமே நாம் ஏற்க வேண்டும்.

விவேக் அறிமுகமான முதல் திரைப்படம் ‘மனதில் உறுதி வேண்டும்’. 1987-ல் வெளியானது. இந்த ஒரே திரைப்படத்தில் மட்டுமே பல நடிகர்கள் அறிமுகம் ஆனார்கள். பாலசந்தர் ஏராளமான புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும் தங்களின் தனித்துவமான திறமையினால் சிலர் மட்டுமே புகழின் உச்சிக்கு நகர்ந்தார்கள். தங்களின் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டார்கள். இந்த வரிசையில் விவேக் முக்கியமானவர்.

‘மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தில் சுஹாசினியின் தம்பிகளில் ஒருவராக விவேக் அறிமுகமானார். மெலிந்த தேகம், அப்பாவித்தனமான முகத்தைக் கொண்டிருந்தாலும் அவர் செய்த அட்டகாசமான காமெடியால் தனித்து கவனிக்கப்பட்டார். பாலசந்தரும் இவரது திறமையைக் கவனித்ததால் அடுத்து ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்திலும் இவருக்கு வாய்ப்பளித்து பயன்படுத்திக்கொண்டார்.

‘இன்னிக்கு செத்தா… நாளைக்கு பால்’ என்று இந்தத் திரைப்படத்தில் விவேக் பேசிய வசனம் அப்போது மிகப் பிரபலமாக இருந்தது. அநாமதேய தொலைபேசி அழைப்பின் மூலம் ஜெயசித்ராவை இவர் கலாய்க்கும் காட்சி இன்றைக்கும் சிரிப்பை வரவழைக்கக்கூடியது.


ஹீரோக்களின் நண்பர்கள் பட்டியலில் ஒருவராக பல திரைப்படங்களில் வந்து கொண்டிருந்த விவேக், ஒரு கட்டத்தில் தனது இடத்தை முக்கியப்படுத்திக் கொள்ளும் இடத்திற்கு நகர்ந்தார். இவருக்கென்று ஒரு வணிக மதிப்பும் ரசிகர் கூட்டமும் உருவானது. இந்த வரிசையில் 1998-ல் வெளியான ‘காதல் மன்னன்’ திரைப்படத்தை முக்கியமானதாக குறிப்பிட வேண்டும். இந்தத் திரைப்படத்தின் உருவாக்கத்தில் விவேக்கின் பங்களிப்பும் முக்கியமானதாக இருந்தது. ஏறத்தாழ ஹீரோவான அஜித்தின் கூடவே பயணிக்கும் பாத்திரம். ஹீரோ தடுமாறும் போதெல்லாம் அவரை இடித்துரைத்து அறிவுரை சொல்லும் பாத்திரத்தை சிறப்பாக கையாண்டார் விவேக். நகைச்சுவை நடிகர் என்பதைத் தாண்டி தன்னை குணச்சித்திர நடிகராகவும் இதன் மூலம் ஆக்கிக் கொண்டார்.

விவேக் நடித்த திரைப்படங்களின் வரிசையில் மிக முக்கியமான மைல் கல் என்று ‘வாலி’யைச் சொல்லலாம். அவரின் நகைச்சுவை முத்திரை மிக அழுத்தமாக பதிவான படம் இது. ‘விவேக்கின் காமெடி டிராக் இருந்தால் போதும்… படம் உத்தரவாதமாக வெற்றி பெறும்’ என்கிற அபாரமான நம்பிக்கையை தயாரிப்பாளர்களிடமும் இயக்குநர்களிடமும் ‘வாலி’ ஏற்படுத்தியது.

மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ திரைப்படத்தில் முழுக்கவும் வித்தியாசமான விவேக்கை காண முடியும். தன்னுடைய நகைச்சுவை அடையாளத்தை முற்றிலும் கழற்றி வைத்து விட்டு முறைப்பெண்ணை அவளுடைய காதலனுடன் இணைத்து வைக்கும் வெள்ளந்தியான பாத்திரத்தில் நன்றாக நடித்திருந்தார் விவேக்.

‘குஷி’, ‘மின்னலே’ என்று பல திரைப்படங்களில் வெளிப்பட்ட விவேக்கின் சிறப்பான நகைச்சுவையை இன்றைக்கும் ரசிக்க முடியும். ‘ரன்’ திரைப்படத்தில் வெளியான இவரது அட்டகாசமான காமெடியை ரசிகர்கள் வெடித்து சிரித்துக் கொண்டாடினார்கள். இந்த வரிசையில் ‘சாமி’ திரைப்படத்தின் நகைச்சுவையும் மிக முக்கியமானது. ஒரு பிராமணரின் பாத்திரத்தில் நின்று கொண்டு இவர் சொன்ன முற்போக்கு கருத்துக்களையும் நையாண்டிகளையும் மக்கள் நிறைய ரசித்தார்கள்.

“டேய் பாத்துடா… ஏதாவது ஏடாகூடமா ஆயிடப் போகுது” என்று ‘சாமி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் பாலசந்தரே விவேக்கை மென்மையாக எச்சரித்ததாக சொல்வார்கள். ஆனால் தனது நகைச்சுவையின் மூலம் அந்த பயத்தைப் போக்கினார் விவேக். நல்ல நகைச்சுவையின் மூலம் எத்தனை ஆழமான விஷயத்தையும் மக்களுக்கு எளிதாக உறுத்தாமல் கடத்தி விடலாம் என்பதற்கான உதாரணம் இது.

கவுண்டமணி – செந்தில் என்கிற நகைச்சுவை ஜோடி பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஆண்டு விட்டு ஓய்ந்த போது ஏற்பட்ட வெற்றிடத்தை தனது பிரத்யேகமான நகைச்சுவையால் நிரப்பினார் விவேக். பிறகு வந்த வடிவேலு இவருக்கு கடும் போட்டியாக அமைந்திருந்தாலும் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக்கொள்வதில் விவேக் ஏறத்தாழ வெற்றி பெற்றார்.


உடல் சார்ந்த நகைச்சுவை, உரையாடலின் மூலம் நிகழ்த்தும் நகைச்சுவை என்று இரு பெரும் பிரிவுகள் உண்டு. சந்திரபாபு, நாகேஷ் போன்றவர்கள் இரண்டு பிரிவுகளையும் கலந்து அசத்தினார்கள். இரண்டாவது பிரிவில் அமைந்த பாணியில் கலக்கியவர் விவேக்.

தன்னை கீழே இறக்கிக் கொண்டு சுயபகடியின் மூலம் மக்களைச் சிரிக்க வைப்பது ஒரு வகை. இந்தப் பாணியின் உச்சம் என்று வடிவேலுவைச் சொல்லலாம். ஆனால் தன்னை சற்று மேலே நிறுத்திக் கொண்டு உபதேச பாணியில் நகைச்சுவை செய்வது இன்னொரு வகை. எம்.ஆர்.ராதா இதன் அற்புதமான முன்னோடி. இந்தப் பாணியை திறமையாகப் பின்பற்றினார் விவேக்.

‘திருந்துங்கடா டேய்’ என்கிற செல்லமான எச்சரிக்கையும் விழிப்புணர்வும் இவரது நகைச்சுவையில் பெரும்பாலும் கலந்திருக்கும். அவற்றில் அடிப்படையான உண்மையும் சமூக அக்கறையும் இருந்ததால் மக்கள் அதை ஆட்சேபிக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்.

பொதுவாக நகைச்சுவை நடிகர்களை டைம்பாஸாக, பொழுது போக்கு ஊறுகாயாக பார்க்கும் வழக்கம் தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் உண்டு. ஆனால் இந்த வழக்கத்தைத் தாண்டி அறிவுஜீவி பிம்பத்திலும் தன்னைப் பொருத்திக் கொண்டவர் என்று விவேக்கை சொல்ல வேண்டும். எனவேதான் பத்மஸ்ரீ உள்ளிட்ட உயரிய விருதுகள் இவரைத் தேடி வந்தன.

‘விவேக்’ என்றால் விவேகமானவர் என்றும் சொல்லலாம். ஜனரஞ்சகமான அடையாளத்தைத் தாண்டி தனது பாணியை விவேகமான நகைச்சுவையாகவும் அமைத்துக் கொண்ட ‘ஜனங்களின் கலைஞனான’ விவேக்கின் நினைவு மக்கள் மனதிலிருந்து மறையவே மறையாது!

Nandri Inaiyam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *