பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக 170 ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பெருந்தோட்ட நிறுவனங்கள், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தனியார் தேயிலை உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளிட்ட மேலும் பல தரப்பினரால் இந்த ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சம்பளத்தை தீர்மானிக்கும் பொறுப்பு சம்பள நிர்ணய சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை வழங்க நேரிடும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளன ஊடகப் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை கூறுகின்றார்.
தொழிலாளர்களுக்கு 1,150 ரூபா சம்பளத்தை வழங்குவதன் மூலம் ஒரு கிலோகிராம் தேயிலைக்கான உற்பத்தி செலவு 825 ரூபாவாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சந்தையில் நிலவும் விலையை விட உற்பத்தி செலவு அதிகரிக்கும் என்பதால் குறித்த தொகையை வழங்குவதில் நடைமுறை சிக்கல் உள்ளதாக தமது தரப்பு ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளதாகவும் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் 75 வீதத்தை சிறு தேயிலை தோட்டங்களே பூர்த்தி செய்வதாக தெரிவித்த அவர், சிறு தேயிலை தோட்டங்களில் பணியாற்றுவோர் தற்போதும் 1,000 ரூபாவுக்கும் மேற்பட்ட நாளாந்த சம்பளத்தை பெற்றுக் கொள்வதாக குறிப்பிட்டார்.
கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு சட்டத்திற்கு மாத்திரம் கட்டுப்பட வேண்டிய நிலை உள்ளதால் கூட்டு ஒப்பந்தத்தில் நீடிப்பது தொடர்பில் பரிசீலிக்க வேண்டியுள்ளதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத் துறையில் 150 வருடங்களுக்கும் மேல் பழமையான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்ற நிலையில், அதனை மாற்றி தொழிலாளர்களுக்கு அதிக நன்மையை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை தமது தரப்பு முன்வைத்துள்ளதாகவும் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
சம்பள நிர்ணய சபையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அதில் கலந்துகொள்ள எதிர்பார்ப்பதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் குறிப்பிட்டது.