கொவிட் தடுப்பூசி ஆபத்தானதா? விளக்குகிறார் தொற்று நோயியல் மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர

கொவிட் தடுப்பூசி பற்றி பல்வேறான சந் தேகங்கள் மக்கள் மனங்களில் நிலவும் நிலையில் அவை குறித்த விரிவான விளக்கங்களைத் தருகிறார் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதம தொற்று நோயியல் மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர

கேள்வி: – உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொவிட் 19 தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்து இலங்கையிலும் வழங்கப்படுகிறது. என்றாலும் இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட ஒரு சிலருக்கும் இத்தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றதே?


பதில்: பொதுவாக தலைவலிக்கு நிவாரணியாக ‘பனடோல்’ பெற்றுக்கொள்ளப்படுகின்றது. அதற்காக எல்லோருக்கும் தலைவலி குணமடைவதில்லை. அதேபோன்று தான் தடுப்பு மருந்தும். தடுப்பு மருந்துகளில் ‘அசிட்டெசிட்’ என்ற பொருள் காணப்படுகின்றது. அது இத்தடுப்பு மருந்திலும் உள்ளது. அப்பொருள் ஒரு சிலருக்கு 78முதல் – 80 வீதம் செயற்படாது. அதனால் அவ்வாறானவர்களுக்கு இத்தொற்று ஏற்படலாம்.

ஆகவே தான் இத்தடுப்பூசியைப் பெற்றாலும் சுகாதாரத் துறையினர் வழங்கியுள்ள அறிவுரைகளைத் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.


அதேநேரம் இத்தடுப்பூசி வழங்கப்படும் தினத்தில் அதனைப் பெற்றுக்கொள்பவரின் உடலில் இவ்வைரஸ் உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் பரீட்சிக்கப்படுவதில்லை. உடலில் எதுவித நோய் நிலையும் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி வழங்குகின்றோம்.
ஆனால் இந்நாட்டில் அடையாளம் காணப்படுகின்ற கொவிட் 19 தொற்றாளர்களில் அனேகருக்கு இத்தொற்றுக்கான அறிகுறிகள் வெளியே தென்படுபவதில்லை.

அதனால் இத்தடுப்பு மருந்தைப் பெறும் போது ஒரிருவரது உடல்களில் நாமறியாத வகையில் இவ்வைரஸ் காணப்பட்டிருக்கலாம். அதன் விளைவாக இத்தடுப்பூசியைப் பெற்ற பின்னர் இத்தொற்றுக்கான நோய் நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இத்தடுப்பூசி செலுத்தப்பட்டு அது உடலில் செயற்பாட்டு நிலையை அடையவும் குறிப்பிடத்தக்க நேரம் தேவை. அதற்கு போதிய காலம் கிடைக்கப்பெறாததன் விளைவாகவும் இத்தொற்று ஏற்படின் நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படலாம்.
அதாவது ஒருவர் இத்தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டதும் அவரது உடலில் இத்தொற்றுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி உருவாகி பலமடையும்.

இதற்கு இரண்டு வாரங்கள் முதல் சிறிது காலம் தேவைப்படும். இடைப்பட்ட காலப்பகுதியில் உடலில் இவ்வைரஸ் காணப்படுமாயின் இந்நோய் ஏற்பட முடியும். மற்றப்படி இத்தடுப்பு மருந்தில் பிரச்சினைகள் இல்லை. தடுப்பு மருந்து பெற்றுக்கொள்பவரின் உடல் நிலைமைக்கு ஏற்பவே அதன் செயற்பாடு அமைகின்றது.

கேள்வி: – அப்படியென்றால் இத்தடுப்பூசி வழங்கப்பட முன்னர் அன்டிஜன் அல்லது பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்ப டுவதில்லையா?
பதில்-: இல்லை. அவ்வாறு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அன்டிஜன் பரிசோதனை செய்தாலும் சிலர் தவறிவிடலாம். இவ்வாறு பரிசோதனை செய்து தடுப்பு மருந்து வழங்கப் போனால் முழு நாட்டு மக்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். அதன் விளைவாக தடுப்பூசி வழக்கப்பட முன்னர் பரிசோதனை செய்யப்படுவதில்லை.

கேள்வி: – இத்தடுப்பு மருந்தை ஒவ்வொருவருக்கும் இரு தடவைகள் வழங்குவது அவசியமா?
பதில் :- ஆம். தற்போது இங்கு அஸ்ட்ரா செனகா தடுப்பு மருந்து வழங்கப்படுகின்றது. இதே தடுப்பு மருந்தே இரண்டாவது சொட்டும் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் சிறந்த பெறுபேறு கிடைக்கப்பெறும் எனக் கருதுகின்றோம். ஆனால் கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டுக்காக உலகில் நான்கைந்து தடுப்பு மருந்துகள் வந்துள்ளன.

அதனால் ஒருவருக்கு முதல் தடவை ஒரு வகைத் தடுப்பு மருந்தையும் இரண்டாம் தடவை மற்றொரு வகைத் தடுப்பு மருந்தையும் வழங்க முடியுமா என நாம் இன்னும் ஆராய்ச்சி செய்யவில்லை. ஆனால் ஐக்கிய அமெரிக்காவில் முதலில் பைஸர் தடுப்பு மருந்தை வழங்கி, இரண்டாம் தடவை அஸ்ட்ரா செனகா தடுப்பு மருந்து வழங்கப்படுவதாக அறிகின்றோம்.


ஆனால் நாம் முதலில் வழங்கிய தடுப்பு மருந்தையே இரண்டாம் தடவையும் வழங்க எதிர்பார்க்கின்றோம். தற்போதைய ஆராய்ச்சி சான்றுகளின் படியே அவ்வாறு செயற்படுகின்றோம். இந்த ஆராய்ச்சிகளில் எதிர்காலத்தில் முன்னேற்றங்கள் ஏற்படுமாயின் அவற்றுக்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொள்ளலாம். அதாவது முதலில் ஒன்றை வழங்கிவிட்டு இரண்டாம் தடவை மற்றொன்றை வழங்க முடியும்.


மேலும் இத்தடுப்பு மருந்தின் முதல் சொட்டை வழங்கி நான்கு வாரங்களுக்குள் இரண்டாவது சொட்டையும் வழங்கிவிடும் நோக்கில் தான் இத்தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தோம். ஆனால் இத்தடுப்பு மருந்தின் இரண்டாம் சொட்டை 08 -முதல் 12 வாரங்களில் வழங்கினால் அதிக பயன்மிக்கதாக அமையும்.

அது தடுப்பூசி பெறுபவருக்கு அதிக பாதுகாப்பாகவும் இருக்கும் என ஆராய்ச்சிகளில் தெரிய வந்திருக்கின்றது. அதனால் முதல் சொட்டை வழங்கி 10 – 12 வார காலப்பகுதியில் இரண்டாவது சொட்டை வழங்கவென தொழில்நுட்பக் குழுக்களில் நாம் தீர்மானங்கள் எடுத்துள்ளோம்.

கேள்வி: இத்தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டுள்ள ஒரு சிலருக்கு மூட்டு வலி, காய்ச்சல், உடல்வலி போன்றவாறான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றதே?


பதில்: – தடுப்பு மருந்து பெறுபவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவது சாதாரணமான விடயம். அந்த வகையில் கடந்த ஜனவரி 29 முதல் இற்றை வரையும் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இத்தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் எவருக்கும் கடுமையான ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதாக இற்றைவரையும் பதிவுகள் இல்லை.

கேள்வி: – தற்போது தடுப்பூசி வழங்கப்படுகின்ற போதிலும் இத்தொற்றுக்கு உள்ளாகின்றவர்களதும் மரணமடைகின்றவர்களதும் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றதே?
பதில்-: இத்தடுப்பூசி வழங்கப்பட ஆரம்பித்து தற்போது தான் இரண்டு வாரங்களாகியுள்ளன. அதிலும் சுகாதாரத் துறையினருக்குத் தான் முதலில் வழங்கப்பட்டது. அச்சமயம் பொது மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் பொதுமக்கள் மத்தியில் தான் இத்தொற்று பதிவாகின்றது. அதேநேரம் இத்தடுப்பு மருந்து வழங்கப்பட்டு அது செயற்பட சுமார் இரு வாரங்களுக்கு மேல் செல்லும். அதன் பின்னர் கொவிட் 19 தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கப்பெறும். அதிலும் இரண்டாம் சொட்டு வழங்கப்பட்ட பின்னரே சிறந்த பாதுகாப்பு கிடைக்கும். அது வரைக்கும் இத்தொற்றின் அச்சுறுத்தல் காணப்படவே செய்யும்.

கேள்வி: – பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் 19 தொற்றின் திரிபடைந்த வைரஸும் தற்போது இங்கும் இனம்காணப்படுகின்றநிலையில் விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தையும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பில் குறிப்பிடுவதாயின்?
பதில்: – கொவிட் 19 தொற்றின் திரிபடைந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக ஒரு சிலர் இந்நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரிருவரைத் தவிர ஏனையவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கி இருக்கும் போதே இனம்காப்பட்டுள்ளனர். அதனால் நாம் அச்சப்படத் தேவையில்லை. அத்தொற்று பரவுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. என்றாலும் மக்கள் கூடும் விழாக்கள், வைபவங்கள் போன்றவை தொடர்பில் வழங்கப்பட்டிருந்த தளர்வுகளை மீண்டும் கடுமையாக நடைமுறைப்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம்.


நன்றி தினகரன் வார மஞ்சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *