
மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி தயாரித்து நடிக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். ‘கூகுள் குட்டப்பன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று (ஜனவரி 28) நடைபெற்றது.

சபரி – சரவணன் இருவரும் இணைந்து இயக்கவுள்ள இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிகுமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் பூஜையில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்வில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது:

‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தில் சிறு சிறு காட்சிகளை மாற்றியிருக்கிறோம். தர்ஷன் – யோகி பாபு இருவருக்குமான காட்சிகளைக் கொஞ்சம் அதிகரித்துள்ளோம். கதை அதேதான். மலையாளத்தில் எப்படிக் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படங்கள் உள்ளதோ, அதேபோல் தமிழிலும் இருக்கிறது. ஒரு பெரிய ஹீரோவுடன் படம் பண்ணும்போது, கதையுடன் மட்டும்தான் பயணிப்பேன். அந்த நாயகனின் இமேஜைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன் என்று சொல்வது தவறு.
ஏனென்றால், கமர்ஷியல் விஷயங்கள் இருந்தால் மட்டுமே படத்துக்கான ஓப்பனிங் இருக்கும். அது இருந்தால் மட்டுமே போட்ட பணத்தைத் திரும்ப எடுக்க முடியும். இப்போதே தமிழில் நிறைய நல்ல கதையம்சம் உள்ள சின்ன படங்கள் வருகின்றன.

அதெல்லாம் கூட இதர மொழிகளில் ரீமேக்கிற்கு வாங்கியிருக்கிறார்கள். ஹீரோ என்ற இமேஜ் வந்தவுடன், அதற்கு மரியாதை கொடுத்து, அதற்குத் தகுந்தாற்போல் படம் பண்ண முடியும்.