ஒட்டுமொத்த தமிழ் சினிமா இசையின் ஒற்றைக் குறியீடு!

எல்லா இசையும், மனதை வசப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் இவரின் இசையில் ஏதோ மயிலிறகு சாதனங்களும் இழைக்கப்பட்டிருக்கிறதோ என்னவோ. கேட்பவரின் உள்ளத்தின் துக்கத்தையெல்லாம் தவிடுபொடியாக்கிவிடும் இவரின் இசைக்கு, மயங்காதவர்களே இல்லை. அந்த இசைக்குச் சொந்தக்காரர்… இசையராஜா. மன்னிக்கவும்… இளையராஜா. இரண்டும் ஒன்றுதான்.

கி.மு., கி.பி. என்று சொல்வது போல், இ.மு., இ.பி. என்று தமிழ் சினிமாவைப் பிரிக்கவேண்டும். அப்படிப் பிரித்துப் பார்க்கவேண்டும். இளையராவுக்கு முன், இளையராஜாவுக்குப் பின் என்று கோடு கிழித்துப் பார்த்தால்தான், எல்லையற்ற இசையையும் இசைக்குள் வித்தைகளையும் புகுத்தி, புகுந்துபுறப்பட்டிருக்கிறார் என்பதை உணரமுடியும்.

அன்னக்கிளி படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த இசைக்குயிலோனுக்கு 78 வயது. ஆனால் பெயருக்கேற்றார் போலவே உடலிலும் உள்ளத்திலும் இசையிலும் ‘இளைய’ராஜாவாகவே திகழ்கிறார் இளையராஜா.

இசை வழியே ராஜாங்கம் நடத்தியவர்… நடத்திக் கொண்டிருப்பவர் இளையராஜா. அன்னக்கிளி என்கிற முதல் படத்தில் இருந்தே, இவரின் சாதனைகள், சரித்திரமாகத் தொடங்கின. இதுவே ஓர் சாதனைதான்.

அன்னக்கிளிக்கு முன்பு வரை, கிராமத்து டீக்கடைகளில் கூட, ஹிந்திப் பாடல்கள் அலறிக்கொண்டிருக்கும். எங்கு திரும்பினாலும் ஹிந்திப் பாடல்கள் நம் செவிக்குள் நாம் விரும்பியோ விரும்பாமலோ வந்து தொட்டுச் செல்லும். ஆனால் அன்னக்கிளிக்குப் பிறகு, நிலைமை மாறியது. எல்லா சாலைகளும் ரோம் நகரம் நோக்கி என்பது போல, எல்லாரின் செவிகளும் ராஜாவின் இசையைக் கேட்டுக்கேட்டு நிரப்பிக்கொள்ளத் தொடங்கின.

அன்னக்கிளியே உன்னைத் தேடுதே… பாடலின் அந்த ஆரம்ப ஹம்மிங், கேட்போர் உயிரையையே ஒருகணம் கரைத்து, இசையுடன் இரண்டறக் கலக்கச் செய்துவிடும். இது ராஜ மாயம்.

16 வயதினிலே படத்தில் செந்தூரப்பூவே பாட்டு ஆரம்பிக்கும்போது ஹம்மிங் இருக்காது. ஆனால் அந்த முந்தைய இசை, ஒரு குதூகலத்தையும் மிகப்பெரிய மென்சோகத்தையும் ஒரேசமயத்தில் தந்து, நம்மை உட்காரச் செய்யும். ஊஞ்சலாட வைக்கும்.

மகேந்திரனின் ’மெட்டி’ படம். ’தனனனனா… தனனனனனா… ’என்று ஹம்மிங்கும் அடுத்து வருகிற இசையும் நம்மை என்னவோ செய்யும். ‘மெட்டி ஒலி காற்றோடு’ என்று ராஜாவின் குரல், அந்தக் குழைவு… நம் மனசை அப்படியே அமைதிப்படுத்திவிடும். நடுவே… ‘ஓஓஓஓஓஓஓஓஓ… வாழ்நாளெல்லாம் உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும்’ என்று ராஜா சொல்லும் போது, வாழும்வரைக்கும் ராஜாவும் ராஜாவின் இசையும் இருந்தாலே போதும் என மனசு ஏங்கும். வேண்டும்.

’சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் ‘நினைவோ ஒரு பறவை’ பாடல். ‘ம்ம்ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்ம்ம்ஹும்…’ என்று ஜானகி ஆரம்பிக்க, ‘நினைவோ ஒரு பறவை’ என்று பாடியும் விட, ‘பாபாபாபாபா…’ என்று கமலின் ஹம்மிங், நம்மை சிறகின்றி பறக்கவைக்கும். இளையராஜாவின் இசையே சிறகாகியிருக்கும்.

‘ஓலா ஓலா ஓ… லலலா..’ என்று ‘மீன் கொடித்தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்’ என்கிற கரும்புவில் படத்தின் பாடல் இன்றைக்கு வரை, வில்லெனப் பாய்ந்து, இனிக்கிறது. கரும்புவில் அல்லவா. அப்படித்தான் வித்தை செய்திருப்பார் ராஜா. வில்லை கரும்பென இனிக்கச் செய்திருப்பார்.

’நிழல்கள்’. இதுவொரு பொன்மாலைப் பொழுது பாடல். ஏ…ஓ….ம்… லல்லல்லா……’ என்று எஸ்.பி.பி.யின் குரலும் குயிலோசையும் கலந்தடிக்க, அங்கே ராஜாவின் கொடி பட்டொளிவீசிப் பறந்தது. பறந்துகொண்டிருக்கிறது.

’இதயக்கோவில்’ படத்தில், ‘ஆஆஆஆஆ… ஆஆஆ.ஆஆஆ… ஆ…’ என்று ’வானுயர்ந்த சோலையிலே’ பாட்டுக்கு முன்னே உயிர் உருக்கும் அந்த ஹம்மிங்… மொத்தப் பாட்டின் ஜீவனையும் சொல்லிவிடும். இதேபடத்தின் ‘இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் ஒரு பாடல்’ என்ற பாடலிலும் ஹம்மிங் அழகூட்டும்.

’அலைகள் ஓய்வதில்லை’. ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து’ பாடல். நடுவே… ‘தனன நநந தனன தநநநநநா…’ என்றும் ராஜாவின் குரலில், ‘தகதோம் தகதோம் தகதோம்… தகதகததோம்’ என்று வருமே… காதலின் அடர்த்தியும் ஆழமும் புலப்படச் செய்யும் இசை. சொல்லப்போனால், இசையின் அடர்த்தியைக் காட்டி, நம்மை சலனமற்ற மன ஆழத்துக்கே கூட்டிச் சென்றிருப்பார் ராஜா.

தங்கமகன் படத்தில், பூமாலை… பாடலில், ‘ஹே… தகததகதா… தகததகதா… ‘ என்று இரண்டுநிமிடங்களுக்கு ஒரு ஹம்மிங் ஜிம்மிக்ஸ் செய்திருப்பார். அந்தப் பாடலுக்கு அந்த ஹம்மிங் மயிலிறகு. நம் மனசுக்கும்தான்! நாசர் இயக்கிய ‘அவதாரம்’ படத்தில் ‘தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல…’ என்ற பாடலில் வரும் ஹம்மிங்கும் வர்ணஜாலங்களைக் காட்டும்!

’நான் தேடும் செவ்வந்திப்பூவிது’ பாடலில் ஆரம்ப ஹம்மிங், ராஜா குரலிசை. கொன்னுடுவார் மனுஷன். அதேபோல், வேதனை, சோகம், தோல்வி, எதிர்கால பயம் என எல்லாவற்றையும் நாயகன் படத்தின் தென்பாண்டிச் சீமையிலே பாடலுக்கு முன்னதான ‘ஆ….ஆ…..ஆஆஆஆஆ…‘ என்று மொத்தமாகக் கொட்டியிருப்பார்.

‘முள்ளும் மலரும்’ பாடல், இளையராஜாவுக்கு சீனிச்சக்கரை படம். செந்தாழம்பூ பாடலுக்கு முன்னதாக ஜேசுதாஸ் அண்ணாவின் ம்ம்ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று இருக்குமே. அது இசைக்கவிதை. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பாடலுக்கு முன்னதாக, ’ஏலேலே ஏலேலே ஏலேலே… ஏலேலே… ஏலேலே…’ என்று வரும். அது கொண்டாட்ட மூடுக்கு நம்மைக் கொண்டு போய்விடும்.

ராஜபார்வையின் ’அந்தி மழை பொழிகிறது’க்கு முன்னதாகவும் ’டிக்டிக்டிக்’ படப் பாடல்களின் ஹம்மிங்குகளும் சொக்க வைக்கும். இசைமழையென பொழிந்து நம்மை நனைத்துக் குளிர்விக்கும்.

இவ்வளவுதானா… ராஜாவின் இசை, கங்கை மாதிரி. அதை சொம்புக்குள் அடைத்துவிடமுடியாது.  இசைஞானிக்கு இன்று பிறந்தநாள். இசையைக் கொண்டாடுவோம். இசைஞானியை வாழ்த்திக் கொண்டாடுவோம்.

 இசை வாழ்க… இசைஞானி வாழ்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *