கட்சியில் இருந்து நீக்கியதாக அறிக்கை விடுகிறார்களே அன்றி அதற்கான காரணத்தை கூறுகிறார்கள் இல்லை. அதனால் நானே அதற்கான காரணத்தையும் கூற வேண்டி இருக்கிறது. தொழாலளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் தலைமையகத்தை அதன் பிரதித் தலைவர் உதயகுமார் தனது தனிப்பட்ட சொத்தாக கையகப்படுத்திக் கொண்டுள்ளார். தொழிலாளிகளின் சொத்தை இவ்வாறு அபகரித்துக் கொண்டதற்கு எதிராக குரல் எழுப்பினேன்.
உதயகுமார்தான் கட்சிக்கு செலவழிக்கிறார் என்ற காரணம் காட்டி என்னை ஒதுக்கினார்கள். அவர் கட்சி தலைமையகத்தை கையகப்படுத்திக்கொண்டு செலவு செய்வது எப்படி சரியாகும். 1965 ஆம் ஆண்டு முதல் அமரர் வி.கே.வெள்ளையன் கட்டிவளர்த்த சங்கத்தை எங்கிருந்தோ வந்தவர்கள் கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்பதே எனது உறுதியான முடிவு. சங்கத்துக்கு உள்ளே இருந்த போதும் வெளியே வந்தபோதும் அதற்காக குரல் கொடுப்பேன். தலைமையகம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பெயரில் மக்ளின் சொத்தாக மாற்றப்படும் வரை இந்த சதிகார கும்பலுக்கு எதிரான எனது குரல் ஒலிக்கும் மனந்திறக்கிறார் முன்னாள் எம்.பி. திலகர்.
இலக்கிய ரீதியாக செயல்படுவதை தற்போது காணமுடிகிறது. அரசியலில் இருந்து முற்றிலும் விலகி விட்டீர்களா? அந்தப் பிரக்ஞை போகலாமா?
நான் எப்போதும் கூறுவது ஒன்றுதான் எனது செயற்பாடுகள் எப்போதும் இலக்கியம்- அரசியல் இரண்டிலும் இருக்கும். அதுவும் குறிப்பாக அது மலையகத்தை முன்னிறுத்தியதாக இருக்கும்.
2001 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘மல்லியப்புசந்தி’ என தலைப்பிட்டு எழுதிய கவிதையே இன்றும் எனது பெயருக்கான அடைமொழியாகவும் இருக்கிறது . அந்தக் கவிதையின் பேசுபொருளான மலையக மக்களின் போராட்டம் இன்னும் ஓய்ந்துவிடவில்லை. உயிர்ப்புடனேயே இருக்கிறது. அது முன்வைக்கும் அரசியலும் உயர்ப்புடனேயே இருக்கிறது.
நான் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் போதும் இலக்கியத்தில் இருந்து ஒதுங்கி விடவில்லை. அப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே எனது இரண்டாவது நூலாக “மலைகளைப் பேசவிடுங்கள்” என வெளிவந்தது.
இப்போது முதலாம் கொரொனா முடக்க காலத்தில் மூன்றாவது நூலான “மலைகளை வரைதல்” வெளிவந்துள்ளது.
என்னுடைய எழுத்துக்களில் இந்த அரசியல் வரைபு இருந்து கொண்டே இருக்கும். நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாதிருப்பதனாலும், கட்சி செயற்பாடுகளில் ஒதுங்கி இருப்பதனாலும் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாகாது.
எனது அரசியல் பிரக்ஞை நான் இறக்கும்போதே இல்லாமல் போகும். நான் இருக்கும்போதே அது இறந்துபோகாது.
கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து உங்களை நீக்கி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளனவே ?
2021 – பெப்ரவரி – 10 ம் திகதியுடன் அத்கைய பொறுப்புகளில் இருந்து முடிவுறுத்திக் கொள்வதான தேர்தல் ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டு ஓய்வாக இருக்கிறேன். ஆனாலும் என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிக்கை விடுகிறார்களே அன்றி அதற்கான காரணத்தை கூறுகிறார்கள் இல்லை.
அதனால் நானே அதற்கான காரணத்தையும் கூற வேண்டி இருக்கிறது. தொழாலளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் தலைமையகத்தை அதன் பிரதித் தலைவர் உதயகுமார் தனது தனிப்பட்ட சொத்தாக கையகப்படுத்திக் கொண்டுள்ளார்.
தொழிலாளிகளின் சொத்தை இவ்வாறு அபகரித்துக் கொண்டதற்கு எதிராக குரல் எழுப்பினேன். உதயகுமார்தான் கட்சிக்கு செலவழிக்கிறார் என்ற காரணம் காட்டி என்னை ஒதுக்கினார்கள். அவர் கட்சி தலைமையகத்தை கையகப்படுத்திக்கொண்டு செலவு செய்வது எப்படி சரியாகும்.
1965 ஆம் ஆண்டு முதல் அமரர் வி.கே.வெள்ளையன் கட்டிவளர்த்த சங்கத்தை எங்கிருந்தோ வந்தவர்கள் கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்பதே எனது உறுதியான முடிவு. சங்கத்துக்கு உள்ளே இருந்த போதும் வெளியே வந்தபோதும் அதற்காக குரல் கொடுப்பேன். தலைமையகம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பெயரில் மக்ளின் சொத்தாக மாற்றப்படும் வரை இந்த சதிகார கும்பலுக்கு எதிரான எனது குரல் ஒலிக்கும்.

2020 பொதுத் தேர்தல் பிரசாரத்தில் நீங்கள் இருந்தபோதுபோது தொலைபேசி சின்னத்துக்கு சிங்கள மக்கள் ஆதரவாக இல்லை என்ற செய்தியை புரிந்து கொண்டிருந்தீர்களா?
நிச்சயமாக தெரிந்ததனால்தான் எனது தேர்தல் வியூகத்தையே மாற்றி அமைத்திருந்தேன். சிங்கள மக்கள் மாத்திரமல்ல தமிழ் மக்களே கூட ஆதரவாக இருக்க வில்லையே.அதற்கு நுவரெலிய மாவட்டமே நல்ல உதாரணம். தொலைபேசி சின்னத்தைவிட மொட்டு அணிக்கே அதிக ஆசனத்தையும் விருப்பு வாக்குகளையும் வழங்கி இருந்தார்கள்.
தொலைபேசி சின்னம் தன்னுடன் இணைந்திருக்கும் சிறு கட்சிகளுக்கு தேசிய பட்டியல் வழங்கும் அளவுக்கு ஆசனங்களைப் பெறாது என்பதில் உறுதியாக இருந்தேன். எனவேதான் அதில் எதிர்பார்ப்பு கொண்டு நுவரெலிய மாவட்டத்தில் பிரசாரத்துக்கு செல்வதில்லை இருந்து தவிர்த்துக் கொண்டேன்.
இப்போது நான் மாவட்ட மக்களை ஏமாற்றவில்லை என்ற திருப்தி எனக்குள் நிரப்பவே இருக்கிறது. எனக்குத் தேசிய பட்டியல் தருவதாக கூறி மக்களிடத்தில் வாக்குகளை வாங்கிக் கொண்டவர்கள் நிலைமைதான் பரிதாபமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் தாங்கள்தான் அமைச்சுப் பதவியைப் பெறுவோம் என்றும் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தும் வாக்கு வாங்கினார்கள். இரண்டுமே நடக்கவில்லை.
எனக்கிருந்த பிரபலத்தை இதுவரை பிரதிநித்துவம் கிடைக்காத இரத்தினபுரி மாவட்டத்துக்குப் பெற்றுக் கொடுக்க முயிற்சித்தேன். முழு மூச்சாக அதற்காக இருந்தேன். வெற்றிக்கனி கிடைக்காவிட்டாலும் வெற்றிப்படங்களில் கணிசமான முனரனேற்றம் தெரிந்தது. அடுத்த முறை இரத்தினபுரி யில் ஒரு பிரதிநிதித்துவத்தைப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் இவ்வாண்டு நடத்தப்படுமானால் மத்திய மாகாண சபைக்கு போட்டியிடும் (சுயேச்சையாகவேணும்) எண்ணம் உள்ளதா?
மாகாண சபைத் தேர்தல் வருமா எனும் சந்தேகமே. இப்போது வரை எதிர்வுகூற முடியாத நிலையே உள்ளது. அப்படி வந்தால் எனது முடிவு எப்படியானதாக இருக்கும் என்பதை அறிவிப்பேன். அதற்கான நேர்த்தியான திட்டம் ஒன்று குறித்து இப்போது உரையாடல்கள் நடாத்தி வருகிறேன்.
மலையக அரசியல் பலம் பொருந்தியதாக அமைந்திருந்த காலம் ஒன்றிருந்தது. மலையக அரசியலை இப்போது எவ்வாறு நோக்குகிறீர்கள்?
அரசியல் பலம் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. எமது மக்கள் வாக்குகளை சரியாகத்தானே வழங்கி இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றில் இருந்த ஒன்பது ஆசனங்கள் இந்த முறையும் உண்டு. அமைச்சுப் பதவிகளும் உண்டு.
அமைச்சுப் பதவிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் பதிவுகளையும் கொண்டு எப்படி பணியாற்றப் போகிறோம், அதற்கான கொள்கைத் திட்டம் என்ன? வேலைத்திட்டம் என்ன என்பதில்தான் வெற்றி தங்கி இருக்கிறது.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதனைக் கூறி வாக்கு கேட்டார்களோ அதனை வென்றெடுக்கும் வேலைத்திட்டமும் அவசியம்.
சம்பள விடயம் : தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு குறித்த எதிர்காலம் எவ்வாறிருக்கப்போகிறது…?
கடந்த 2020 ஆண்டு இதே ஜனவரி மாதத்தில் எனது நிலைப்பாடு என்ன என்பதை நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையாக முன்வைத்து தெளிவுபடுத்தி உள்ளேன். தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உடைமையாளர்களாக மாற்றுவதே ஒரே தீர்வு. அதற்கான மாதிரியைப்பெற வேறு எங்குமே போகத் தேவை இல்லை. தென்னிலங்கையில் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக அந்த நடைமுறை உள்ளது. இப்போது ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கினை சிறுதோட்டங்களே வழங்குகின்றன.
சம்பள நிர்ணய சபை – கூட்டு ஒப்பந்தம் என எல்லாமே தோல்வியடைந்த ஒரு முறைமை என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும். அதன் உச்சமாக கடந்த ஓராண்டு காலத்தைச் சொல்ல முடியும். நிறைவற்று அதிகார ஜனாதிபதியே அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து அனுமதித்துக் கொண்டாலும், பிரதமரே வரவு செல்வுத் திட்டத்தின் ஊடாக உறுதி அளித்தாலும் கிடைக்காத அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாவை சம்பள நிர்ணய சபையின் அறிவிப்பிலும் பெற முடியாது போனால் இனி எங்கே போய்ப் பெறுவது. ஐக்கிய நாடுகள் சபையிலா?
எனவே தற்போதைய கம்பனி முறைமையை மாற்றி தோட்டங்களை சிறு உடமைகளாக மக்களிடம் வழங்கி அவர்களிடம் அறுவடையைக் கொள்வனவு செய்து தொழிற்சாலைகள், ஏற்றுமதிகளை கம்பனிகள் நடாத்தும் ஒரு முறைமையை அறிமுகம் செய்தல் வேண்டும்.
அரசாங்கம் அறிவித்தாலும் கூட வீடமைப்புக் காணிகளை வழங்க கம்பனிகள் மறுக்கும் அவல நிலையில் இருந்து மக்களை மீட்கவும் இதுதான் வழி. அவர்கள் தமக்கு தேவையான வீடுகளையும் தமது காணிகளில் அமைத்துக் கொள்வர். சுருக்கமாக சொன்னால் அடிமைத் தனத்துக்கு விடிவு கிடைக்கும்.

மலையக படித்த இளைஞர் மத்தியில் ஒரு எழுச்சியை காணமுடிகிறது. ஒரு குழுவினர் தோட்டங்களில் வாசிகசாலைகளை நிறுவி வருகிறார்கள். அறுபதுகளில் காணப்பட்ட இலக்கிய எழுச்சியைப் போன்றே மலையக சமூகத்துக்கு விழிப்பூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். உங்கள் பார்வையை தருவீர்களா?
நல்ல முயற்சிகள்தான். வரவேற்கப்பட வேண்டியவைதான். ஆனால் இவை புத்தாக்க (innovative) முயற்சிகள் அல்ல. நீங்கள் சொன்னதுபோல அறுபதுகளில் நடந்தவைதான். அறுபதுகளில் நடந்தவற்றைதான் நாங்கள் மீளவும் செய்ய நேர்ந்துள்ளது என்பதற்கு பின்னால் உள்ள பலவீனம் உணரப்படுதல் வேண்டும்.
இலங்கை வந்து 200 வருடங்களை எட்டிப்பிடிக்கும் மலையகத் தமிழர் சமூகம் முதல் நூறு ஆண்டு காலமும் முற்றுமுழுதான கொத்தடிமைச் சமூகமாக வைக்கப்பட்டிருந்த வரலாறும் அதற்கடுத்த நூறு ஆண்டுகளில் அடைந்திருக்கக் கூடிய அரசியல், சமூக, பண்பாட்டு பரிமான மாற்றங்களையும் அவதானத்தில் எடுத்து இன்றைய கோரிக்கை என்னவாக இருக்கவேண்டும் எனும் தீர்மானத்துக்கு இளைய தலைமுறையினர் வரவேண்டும். அவை அரசியல் தீர்மானங்களாக அமைந்து அவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்கும் அரசியல் முன்னெடுப்புகளும் அவசியம்.
அத்தகைய பேசுபொருள்கள் என்ன என்பதே எனது எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் இலக்கிய வடிவமாக பிரதிபலிக்கிறது. பொருத்தமான பொழுதொன்றில் அது அரசியல் வடிவத்தையும் எடுக்கும்.
8கடந்த காலங்களில் ரஷ்ய சார்பு, சீன சார்பு, மொஸ்கோ, பீக்கிங் இடதுசாரிக்கட்சிகளின் கிளைகள் இலங்கையில் இயங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாரதீய ஜனதா கட்சியின் கிளையை இலங்கையில் ஆரம்பிக்கப்போவதாக பேசப்படுகிறது. இந்தியாவிலிருந்து உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் எதுவும் வராத நிலையில் இலங்கை அரசியலில் இதன் தாக்கம் குறித்த உங்களது பார்வையில்…..?
ஒரு சினமா பாடல் நினைவுக்கு வருகிறது. ‘மொட்டு ஒன்று மலர்ந்திட துடிக்கும்’ ….. என ஆரம்பித்து ‘ அது கல்லின் தோல்வியா …. உளியின் வெற்றியா’ என தொடரும் பல்லவி அது.
இடதுசாரிகளின் சீனசார்பு – மொஸ்க்கோ சார்பு நிலைப்பாடுகளுடன் மொட்டுகள் மலர்வதை ஒப்பிடக்கூடாது. அவற்றிற்கு பின்னால் ஒரு தத்துவார்த்த நெறிமுறை இருந்தது. ஒரு சமூக விஞ்ஞான அணுகுமுறை இருந்தது. இன்றைய நிலையில் அத்தகைய பிளவு அவசியற்ற ஒன்று என மார்க்கிய ஆய்வறிஞர்கள் கருத்துரைக்கின்றனர்.
இதற்கெல்லாம் அப்பால் சென்று மதவாத, இனவாத அடிப்படைகளைக் கொண்ட மொட்டுக்கும் மலருக்கும் ஆன இந்த இடைத் தொடர்புகள் வெறும் வேடிக்கைப் பேச்சுகள் மட்டுமே.
சீன கம்யூனிஸ்ட் கட்சி யுடன் இலங்கை கட்சி ஒன்று மெய்நிகர் மாநாடு நடாத்திய செய்திகளின் மறுவடிவமாகவே திரிபுராவில் இருந்து திடீர் என ஒரு அறிவிப்பையும் பார்க்க வேண்டியுள்ளது.
பூகோள அரசியலில் சிக்கித்தவிக்கும் எமது இலங்கைத் தேசத்தின் இறைமையை மதிக்கும் எவரும் இறக்குமதி அரசியலை ஏற்கமாட்டார்கள். “இலங்கை எம் தேசம்” எனும் உணர்வை கட்டியெழுப்பும் பன்மைத்துவத்தைப் புரிந்து கொண்ட அரசியல் செல்நெறியே அவசியம்.