அறுபது தமிழ் வருடங்களின் சுற்றுவட்டத் தொடரில் 35 ஆவதாக பிலவ வருடம்

உலகில் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் சூரிய பகவான். நவக்கிரக நாயகர்களுள் முதல்வராகப் போற்றித் துதிக்கப்படும் இவர், உலகின் சகல இயக்கத்திற்கும் காரணமாக இருக்கிறார்.

சித்திரைப் புதுவருடம் ஆங்கில புத்தாண்டைப் போல குறிப்பிட்ட ஒரு நேரத்திற்கு பிறப்பதில்லை. சூரிய பகவானின் இராசி மண்டல சஞ்சாரத்திற்கு அமையவே புதுவருடம் உதயமாகிறது. அதாவது, பன்னிரு இராசிகளுள் முதலாவதான மேடம் இராசிக்குள் சூரியன் பிரவேசம் செய்யும் போது, பன்னிரு மாதங்களுள் முதலாவதான சித்திரை மாதம் பிறக்கிறது.

பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கிரக சஞ்சார நேரங்களுக்கு அமைய, சூரிய பகவானின் மேடம் இராசிப் பிரவேசமே சித்திரை மாதப் பிறப்பாகவும், தமிழ்ப் புதுவருடப் பிறப்பாகவும், மேடம் இராசிப் பிரவேச நேரமே புதுவருடப் பிறப்பு நேரமாகவும் அமைகிறது.

இலங்கையில் சித்திரைப் புதுவருடம் தமிழ்- சிங்கள மக்களுக்கு உரிய பண்டிகையாக முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ் மக்களும், பௌத்த மதத்தைச் சேர்ந்த சிங்கள மக்களும் சித்திரைப் புதுவருடத்தை கொண்டாடுவது வழக்கம். எனவே இதனை தமிழ்- சிங்கள புதுவருடம் என்று சிறப்பித்து சொல்லப்படுவதுடன் ஒரு தேசியப் பெருவிழாவாகவும் அமைந்துள்ளது.

மக்கள் புதிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும், நம்பிக்கைகளை செயற்படுத்துவதற்கும் சித்திரைப் புதுவருடத்தின் வரவைக் காத்திருப்பது வழக்கம். மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்த பின், பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிறத்திலான ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து கொண்டு ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்வதுடன் புதுவருடக் கருமங்கள் ஆரம்பமாகின்றன.

சுபதினம், சுபநேரம் என்பன புதுவருடக் கருமங்களின் போது முக்கிய இடத்தை வகிக்கின்றன. கைவிசேடம் வழங்குதல், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளுதல், குரு மற்றும் பெரியோர்களை தரிசனம் செய்து ஆசி பெற்றுக் கொள்ளுதல், தானதருமங்கள் செய்தல் போன்ற பாரம்பரிய நடைமுறைகளுடன் சித்திரைப் புத்தாண்டு இணைந்துள்ளதை சிறப்பாகச் சொல்லலாம்.

இம்முறை உதயமாகும் சித்திரைப் புதுவருடத்தின் பெயர் ‘பிலவ’ என்பதாகும். அறுபது தமிழ் வருடங்களின் சுற்றுவட்டத் தொடரில் இது 35 ஆவது வருடமாகும். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பின்னிரவு 1 மணி 39 நிமிடத்தில் பூர்வபட்ச துதியை திதியில், பரணி நட்சத்திரம் 2ஆம் பாதத்தில், மேட இராசியில், மகர லக்னத்தில் புதுவருடம் பிறக்கிறது. அதேதினம் இரவு மணி 9.39 முதல் பின்னிரவு மணி 5.39 வரை விஷூ புண்ணிய காலமாகும்.

இந்த புண்ணிய காலத்தில் சகலரும் தலையில் விளா இலையையும் காலில் கடம்பம் இலையையும் வைத்து மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்ய வேண்டும். இதன் பின்னர் நீலம், சிவப்பு நிறமுள்ள பட்டாடை அல்லது நீலம், சிவப்பு கரையமைந்த புதிய பட்டாடையையும், நீலம் பவளம் பதித்த ஆபரணத்தையும் அணிந்து கொண்டு ஆலயம் சென்று இறைவழிபாடு செய்ய வேண்டும் என்று வாக்கிய பஞ்சாங்கம் சொல்கிறது.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பின்னிரவு 2 மணி 31 நிமிடத்தில் பூர்வபட்ச துதியை திதியில், பரணி நட்சத்திரம் 2ஆம் பாதத்தில், மேட இராசியில் மகர லக்னத்தில் புதுவருடம் சிறப்பிக்கிறது. அதேதினம் இரவு மணி 10.31 முதல் மறுநாள் காலை மணி 6.31 வரை மேட சங்கிரமண அல்லது விஷூ புண்ணிய காலமாகும்.

இந்த புண்ணியகாலத்தில் தலையில் கடம்பம் இலையையும், காலில் வேப்பம் இலையையும் வைத்து மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்ய வேண்டும். இதன் பின்னர் செந்நிறப்பட்டு அல்லது சிவப்பு கரை வைத்த வெள்ளை புதுவஸ்திரத்தையும், பவளம் பதித்த ஆபரணத்தையும் அணிந்து கொண்டு ஆலயத்திற்குச் சென்று இறைவழிபாடு செய்ய வேண்டும் என திருக்கணித பஞ்சாங்கம் சொல்கிறது.

புதுவருடம் பிறந்தால் கைவிசேடம் பரிமாறிக் கொள்வது பாரம்பரிய வழக்கமாகும். குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத் தலைவரிடமிருந்து அல்லது மூத்தோர்களிடமிருந்தும், நிறுவனங்களில் பணிபுரிவோர் தங்களது வேலை கொள்வோரிடமிருந்தும் கைவிசேடம் பெற்றுக் கொள்வார்கள்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 14ஆம் திகதி புதன்கிழமை காலை மணி 9.09 முதல் 9.52 வரையும், அதேதினம் பிற்பகல் மணி 2.22 முதல் 4.11 வரையும், 17ஆம் திகதி சனிக்கிழமை காலை மணி 7.49 முதல் 9.00 மணிவரையும், அதேதினம் பிற்பகல் மணி 3.04 முதல் 3.59 வரையும் கைவிசேடத்துக்குரிய சுபநேரங்களாகும். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 14ஆம் திகதி புதன்கிழமை காலை மணி 6.15 முதல் 7.30 வரையும் அதேதினம் மாலை மணி 6.15 முதல் 7.00 மணிவரையும் 17ஆம் திகதி சனிக்கிழமை காலை மணி 10.30 முதல் 11.40 வரையும் கைவிசேடத்துக்குரிய சுபநேரங்களாகும்.

உதயமாகும் சித்திரைப் புதுவருடத்தில் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று விருந்துபசாரங்களில் கலந்து கொள்வதற்குரிய சுபநேரங்களாக வாக்கிய பஞ்சாங்கத்தில் 17ஆம் திகதி சனிக்கிழமை காலை மணி 7.49 முதல் 9.00 மணி வரையும், அதேதினம் மாலை மணி 3.04 முதல் 3.59 வரையும், திருக்கணித பஞ்சாங்கத்தில் 14ஆம் திகதி புதன்கிழமை காலை மணி 6.15 முதல் 7.30 வரையும், அதேதினம் பகல் 10.00 மணி முதல் 11.45 வரையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தைப்பொங்கல் திருநாளைப் போலவே சூரிய பகவானுக்குப் பொங்கிப் படைக்கும் நிகழ்வும் சித்திரைப் புதுவருடத்திலன்று இடம்பெறுவது வழக்கம். இம்முறை 13ஆம் திகதி பின்னிரவு புதுவருடம் பிறப்பதால், மறுநாள் 14ஆம் திகதி புதன்கிழமை காலை சூரிய உதயத்தின் பின்னரே பெரும்பாலானவர்கள் பொங்கல் நிகழ்வுடன் புதுவருடக் கருமங்களை ஆரம்பிப்பார்கள்.

தேகநலன் பாதிக்கப்பட்டவர்கள் புதன்கிழமை காலையில் மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்வது பொருத்தமானது என சைவ அறிஞர்களால் சொல்லப்பட்டுள்ளது.

வசந்தகாலம் எனச் சிறப்பித்துச் சொல்லப்படும் இளவேனில் சித்திரைப் புதுவருடத்திலிருந்தே ஆரம்பமாகிறது. குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்கள் வசந்தத்தின் உன்னத காலப்பகுதியாக அமைந்துள்ளன. தற்போது உலகளாவிய ரீதியில் நிலவிவரும் கொரோனா கிருமித் தொற்றுப் பரவலின் தாக்கம் மலரும் புத்தாண்டில் முற்றாகவே மறைந்து, மக்கள் அனைவரும் நோயின்றி சுகநலத்துடனும், நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழும் நல்லதொரு சூழ்நிலை ஏற்பட வேண்டும் என இறையருளை வேண்டிப் பிரார்த்திப்போமாக!

  • அ. கனகசூரியர் – Nandri Thinakaran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *