அமரர். ஆறுமுகன் தொண்டமானின் இரு பக்கங்கள்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு இரு தசாப்தங்களாக அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிவந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமான் இற்றைக்கு ஓராண்டுக்கு முன்னர் இதே நாளில் மாலைவேளையில் காலமானார். அவரின் திடீர் மறைவானது மலையக மக்கள் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

‘ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை’ என்பதுபோல பன்முக ஆளுமை இல்லாவிட்டாலும் ஆறுதலுக்காகவேனும் மலையகத் தமிழர்களுக்கு ‘ஆறுமுகன்’ என்ற ஒரு தலைமைத்துவம் இருந்தது. தற்போது அதுவும் மௌனித்துவிட்டதால் மக்களுக்கு ஏதேவொரு விதத்தில் இழப்புதான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பெருவிருட்சம் சரிந்துவிட்டது, இமயமலை இடிந்துவிட்டது என்றெல்லாம் இ.தொ.காவின் தொண்டர்கள், ஓராண்டு காலமாக ‘தொண்டமான்’ புராணம் பாடினாலும், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை விஞ்ஞானப்பூர்வமாக அலசி ஆராய்ந்தால் அவர்கள் இன்றுகூட நவீன அடிமைகளாகவே வழிநடத்தப்படுகின்றனர். உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்படுகின்றன.

எனவே, மேற்படி வர்ணிப்புகள் சரியானவையா என மலையக புத்தி ஜீவிகள் கேள்வி எழுப்புகின்றனர். மலையகத் தமிழர்களுக்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே கிடைத்திருக்க வேண்டிய உரிமைகள்கூட கிள்ளியே கொடுக்கப்பட்டு வருகின்றன.

ஆயிரம் ரூபா சம்பளத்துக்காககூட ஆயிரம் போராட்டங்கள், 5 வருடங்கள் இழுத்தடிப்பு , ஏமாற்றங்கள் என துரோகங்கள் தொடர்ந்தன. இறுதியில் ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டது என அறிவிக்கப்பட்டது. ஆனால் தொழில் சுமைகள் இன்று அதிகரித்துள்ளன.

இலங்கை முடியாட்சியின்போதும் ஏன்…! குடியாட்சியிலும்கூட மலையகத் தமிழர்கள் ஒடுக்கப்பட்டனர். அடக்கி ஆளப்பட்டனர். இன்றும் ஏதோவொரு விதத்தில் அவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே, தனிநபரின் மரணத்துக்கு அப்பால் வஞ்சிக்கப்பட்ட ஓர் சமூகம் கடந்து வந்த பாதையும், தலைமைத்துவம் வழங்கியவர்களின் இரு பக்கங்களையும் பார்க்கவேண்டியுள்ளது.

அதற்காக கோப்பி யுகம் முதல் இன்றுவரை கண்ணோட்டம் செலுத்தப்படுகின்றது.மலையகத் தமிழர்களின் குடியேற்றம்…1815 ஆண்டில் கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் – மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சியது. எல்லா விடயங்களும் அவர்களின் கட்டளையின்படியே அரங்கேறின.1824 ஆம் ஆண்டில் ஜோர்ஜ் பேர்ட் என்பவரால் இலங்கையில் கம்பளை, சிங்ஹாபிட்டியவில் கோப்பி பயிர் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. காலப்போக்கில் ஒருவகையான நோய்த்தாக்கத்தால் கோப்பி பயிர்செய்கை முற்றாக அழிவடைந்தது.இதையடுத்தே ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் 1867 ஆம் ஆண்டில் லூல் கந்தரா. எனும் இடத்தில் தேயிலை பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டது.

1827 ஆம் ஆண்டிலேயே தென்னிந்தியாவிலிருந்து முதலாவது தொழிலாளி இலங்கையை வந்தடைந்தார் எனக் கூறப்பட்டாலும், தேயிலைப் பயிர்செய்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே கொத்துக் கொத்தாக வந்து குவிந்தனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.கரையோரப்பகுதிகளிலிருந்து கால்நடையாக மலையகப்பகுதிகளுக்கு சென்ற மக்கள் பல இடங்களிலும் அடிப்படைவசதிகள்கூட இன்றி குடியமர்த்தப்பட்டனர்.

குடியமர்த்தப்பட்டனர் எனக் கூறுவதைவிட லயன் அறைகளில் சிறைவைக்கப்பட்டனர் என்றே கூறவேண்டும்.வெள்ளையர்களின் நிர்வாகத்தின்கீழ் மலையகத் தமிழர்கள் அடிமைகளாகவே வழிநடத்தப்பட்டனர்.

உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படவில்லை. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைகூட மறுக்கப்பட்டது. இப்படி பல கொடுமைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.இலங்கை, இந்திய காங்கிரஸ் உதயமும்குடியுரிமை பறிப்பும்இலங்கையில் வாழ்ந்த இந்திய வர்த்தகர்கள், தொழிலாளர்கள், அரச பதவிகளில் இருந்தவர்களுக்கு எதிராக நெருக்கடிகள் வலுத்ததால், இது தொடர்பில் கண்காணிப்பதற்கு தனது விசேட பிரதிநிதியாக நேருவை, காந்தி 1939 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கைக்கு அனுப்பிவைத்தார்.

கொழும்பில் செயற்பட்ட இந்திய அமைப்புகளிடையே ஒற்றுமை இருக்கவில்லை. இதை உணர்ந்த நேரு அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கினார். கொழும்பில் உள்ளவர்களைமட்டுமின்றி தோட்டத்தொழிலாளர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் நேரு வலியுறுத்தினார். இதற்கு சிலர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால், நேரு அதை ஏற்கவில்லை.

இழுபறிக்கு மத்தியில் 1939 ஜுலை மாதம் 24 ஆம் திகதி இறுதிக்கட்ட பேச்சுகள் நள்ளிரவு தாண்டியும் நடைபெற்றது. பிளவுபட்டிருந்தவர்களெல்லாம் ஒரணியில் திரண்டனர்.இதன் பிரதிபலனாக இலங்கை, இந்திய காங்கிரஸ் உதயமானது. இந்திய வம்சாவளி மக்களுக்கான அரசியல் இயக்கமாகவும் செயற்பட்டது. புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வமைப்பு சற்று ஆறுதலாக இருந்தது. இவ்வமைப்பே தற்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக செயற்பட்டுவருகின்றது.

இலங்கையில் 1947 இல் நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்கிய இலங்கை, இந்திய காங்கிரஸ் சிறந்த வெற்றியை பதிவுசெய்தது. அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் உட்பட 7 பேர் நாடாளுமன்றம் தெரிவானார்கள். பொதுத்தேர்தலின் பின்னர் அமைந்த முதலாவது பாராளுமன்றத்திலேயே அதாவது 1948 இல் பிரஜா உரிமை சட்டத்தின்கீழ் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.

அதன்பின்னர் தேர்தல் திருத்தச்சட்டமூலம் ஊடாக வாக்குரிமையும் மறுக்கப்பட்டது. இதனால் மலையகத் தமிழர்கள் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டனர். டி.எஸ். சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் இந்த துரோக- அடாவடிச் செயலுக்கு அரசின் பங்காளிக்கட்சியாக இருந்த தமிழ் காங்கிரசும் துணைநின்றது. எனினும் தந்தை செல்வா இதனை கடுமையாக எதிர்த்தார் – வன்மையாக கண்டித்தார் – மலையகத் தமிழர்களுக்காக துணிகரமாக குரல் கொடுத்தார்.

இறுதியில் தமிழ் காங்கிரசுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அரசாங்கத்திலிருந்தும் வெளியேறினார். தந்தை செல்வாவுக்கு ஆதரவாக மேலும் சிலர் அவர் பின்னால் அணி திரண்டனர்.இந்நிலையில் 1949 டிசம்பர் 18 ஆம் திகதி தந்தை செல்வா தலைமையில் ‘சமஷ்டி கட்சி’ உதயமானது.காலப்போக்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியாக பெயர் மாற்றம் பெற்றது. கட்சிகளுக்கிடையே பிளவுதனித்து நின்று போராடிய தொண்டமான் 1949 களில் இலங்கை குடியுரிமைகோரி விண்ணப்பித்தவர்களில் சிலருக்கு மாத்திரமே அனுமதி கிடைத்தது.

அதன்பின்னர் 1964 இல் கைச்சாத்திடப்பட்ட சிறிமா -சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.இந்த உடன்படிக்கையின் பிரகாரம் 5 இலட்சத்து 25 ஆயிரம் மலையகத் தமிழர்களை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் 3 இலட்சம் 25 ஆயிரம் பேருக்கு 1964 இற்கும் 79 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இதனால் சொந்தங்கள் பிரிக்கப்பட்டன. பாதிபேர் இந்தியாவுக்கும், மீதிபேர் இங்கேயும் வாழ்ந்தனர். குடியுரிமையையும், வாக்குரிமையையும் பெறுவதற்கு போராட்டங்கள் தொடர்ந்தன.

இதற்கிடையில் ஐக்கியமாக இருந்த மலையக அரசியல் தலைவர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. முதலில் அமரர் அஸீஸ் காங்கிரஸில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் அமரர் வெள்ளையன், சி.வி.வேலுபிள்ளை என சிலர் வெளியேறி புதிய சங்கங்களை உருவாக்கினர். எனினும், சௌமியமூர்த்தி தொண்டமான் தளரவில்லை.

காங்கிரஸை வழிநடத்தினார். 1960 ஶ்ரீமா ஆட்சியிலும், 65 இல் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியிலும் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பு வழங்கப்பட்டது.1977 இல் நடைபெற்ற தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டது.

நுவரெலியா தொகுதியில் 35 ஆயிரத்து 743 வாக்குகளைப் பெற்று சௌமியமூர்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார். 1947 இற்கு பிறகு வாக்குரிமைமூலம் மலையக பிரதிநிதியொருவர் பாராளுமன்றம் சென்ற சந்தர்ப்பம் இதுவாகும்.1982 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அமரர் ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு ஆதரவு வழங்கிய சௌமியமூர்த்தி தொண்டமான், மலையக மக்களுக்கு குடியுரிமை பெறுவதில் குறியாக இருந்தார்.

பல அழுத்தங்களுக்கு மத்தியில் 1988 இல் குடியுரிமை மற்றும் வாக்குரிமை மலையக மக்களுக்கு கிடைத்தது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் வரலாற்றில் இதுவே மகத்தான வெற்றியாக பார்க்கப்படுகின்றது. இந்த விடயத்தை வைத்தே இன்றளவிலும் அரசியல் நடத்தப்படுகின்றது.

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானை இந்த விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டே மலையக தந்தை என அழைக்கின்றனர்.இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வடக்கு தமிழ்க் கட்சிகளுடன் இணைந்தே செயற்பட்டுவந்தது. 1972 இல் உதயமான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலும் இணைத் தலைமை பதவியை வகித்துள்ளார். எனினும், வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர் உறவில் விரிசல் ஏற்பட்டது.

இ.தொ.காவும், பொதுத்தேர்தல்களும்1989 பெப்ரவரி 15 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் யானை சின்னத்தின்கீழ் போட்டியிட்டது.

இ.தொ.காவின் வேட்பாளர் முத்து சிவலிங்கம், வீ. அண்ணாமலை ஆகியோரும் தோல்வியைத் தழுவினர். எனினும், ஐ.தே.க. ஆட்சியில் இ.தொ.காவுக்கு இரண்டு தேசியப்பட்டியல்கள் வழங்கப்பட்டன.சௌமியமூர்த்தி தொண்டமானும், பிபி தேவராஜும் நாடாளுமன்றம் சென்றனர். அமைச்சரவையிலும் இடம்பிடித்தனர்.

1989 இல் நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட சந்திரசேகரனாலும் வெற்றிபெறமுடியாமல்போனது1994 ஆகஸ்ட் 16 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தே இ.தொ.கா. போட்டியிட்டது.நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா. பட்டியலில் போட்டியிட்ட முத்து சிவலிங்கம் 85 ஆயிரத்து 490 வாக்குகளையும், சுப்பையா சதாசிவம் 83 ஆயிரத்து 368 விருப்பு வாக்குகளையும், ஆறுமுகன் தொண்டமான் 75 ஆயிரத்து 297 விருப்பு வாக்குகளையும் பெற்றனர்.நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாக களமிறங்கிய மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் 23,453 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.சந்திரிக்கா தலைமையிலான மக்கள் கூட்டணி 14 போனஸ் ஆசனங்கள் சகிதம் 105 ஆசனங்களே கைவசம் இருந்தன.

இந்நிலையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேசக்கரம் நீட்டியது. (6+1) ஏழு ஆசனங்கள்.இதனால் ஆட்சியமைப்பதற்கு (113) சந்திரிக்காவுக்கு மேலுமொரு ஆசனம் (எம்.பியின் ஆதரவு) தேவைப்பட்டது.இதன்போதே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக சந்திரசேகரன் உருவெடுத்தார். சந்திரிக்காவுக்கு ஆதரவு வழங்கினார். பின்னர் பிரதி அமைச்சு பதவியும் வழங்கப்பட்டது.தேர்தலின் பின்னர் மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்ட இ.தொ.காவின் தலைவருக்கு சந்திரிக்காவின் அமைச்சரவையில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு பதவி வழங்கப்பட்டது. தாத்தா தொண்டமானின் மறைவும்பேரன் தொண்டமானின் பதவியேற்பும்1999 ஒக்டோபர் 30 ஆம் திகதி சௌமியமூர்த்தி தொண்டமான் உயிரிழந்தார். இதொ.காவில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இருந்தனர்.

எனினும், தலைமைப் பதவியை ஆறுமுகன் தொண்டமான் பொறுப்பேற்றார். (நீண்டகாலமாக தலைமைப்பதவி வெற்றிடமாக இருந்தது.) இதனால் இ.தொ.காவுக்குள் மோதல் உருவெடுத்தது. மூத்த உறுப்பினர்கள் சிலர் வெளியேறி புதுக்கட்சி துவங்கினர்.தொண்டர்களும் கதிகலங்கி நின்றனர்.

கட்சிதாவுதல், காலைவாருதல், கழுத்தறுப்பு செய்தல் என துரோக அரசியலுக்கே உரிய அத்தனை அம்சங்களும் அரங்கேறின.தொண்டமான் பரம்பரை சலுகை அரசியலை நடத்திகிறது என்ற குற்றச்சாட்டால் மறுபுறத்தில் சந்திரசேகரன் உரிமை அரசியலை நடத்தினார். வடக்கு, கிழக்கு கட்சிகளின் ஆதரவும் அவருக்கு இருந்தது. இதுவும் ஆறுமுகனுக்கு தலையிடியாக மாறியது. ஆனாலும் அவர் தளரவில்லை. இதன்மூலம் தனக்கு தலைமைத்துவ பண்பு உள்ளது என்பதை நிரூபித்தார்.2000 ஒக்டோபர் 10 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணியே வெற்றிபெற்றது.

இக்கூட்டணியின்கீழ்தான் இ.தொ.கா. போட்டியிட்டது. ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம், ஜெகதீஸ்வரன் ஆகியோர் வெற்றிபெற்றனர். எனினும், ஓராண்டுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைந்து யானை சின்னத்தில் இ.தொ.கா. போட்டியிட்டது.நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிட்ட ஆறுமுகன் தொண்டமான் 121,542 விருப்பு வாக்குகளையும், பெ. சந்திரசேகரன் 121,421 விருப்பு வாக்குகளையும், முத்து சிவலிங்கம் 107,338 விருப்பு வாக்குகளையும் பெற்றனர். அதன்பின்னர் ஆறுமுகன் தொண்டமானுக்கான செல்வாக்கும் கோலோச்சியது.

நாடாளுமன்றத்தில் ஆயுட்காலம் முடிவடைவதற்குள்ளேயே நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்திரிக்கா நாடாளுமன்றத்தைக் கலைத்து 2004 ஏப்ரல் 2 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது.ஐ.தே.கவுடன் இணைந்தே நுவரெலியாவில் இ.தொ.கா. போட்டியிட்டது. 99,783 வாக்குகளைப் பெற்று தொண்டமான் வெற்றிபெற்றார்.

தேர்தலின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இ.தொ.கா. சங்கமித்தது. 2010 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தே இ.தொ.கா. போட்டியிட்டது. நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கிய ஆறுமுகன் தொண்டமான் 60 ஆயிரத்து 997 வாக்குகளைப் பெற்று கூட்டணியின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அத்தேர்தலில் இ.தொ.காவுக்கு சவாலாக எந்தவொரு கூட்டணியும் இருக்கவில்லை.2015 ஓகஸ்ட் 17 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் போட்டி நிலவியது.

இ.தொ.காவுக்கு கடும் போட்டியாக – சவாலாக மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி உருவெடுத்தது. ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகியன இக்கூட்டணியில் அங்கம் வகித்தன.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இரண்டு ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியது. ஆறுமுகன் தொண்டமான் 61 ஆயிரத்து 987 வாக்குகளைப் பெற்று சபைக்கு தெரிவானார்.2018 இல் நடைபெற்ற உள்ளாட்சிமன்றத் தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா. அமோக வெற்றிபெற்றது. இதற்கு சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கிய ஆறுமுகன் தொண்டமான், 2019 இல் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவின் வெற்றிக்கும் தீவிரமாக உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.’தொண்டமான்கள்’செய்ய தவறியவை…….

.மலையகத்தில் உள்ள கட்சிகளுள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானும், ஆறுமுகன் தொண்டமானுமே அதிக தடவைகள் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவிகளை வகித்தனர். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி அமைத்து குடியேறும் அரசியல் தந்திரத்தை – மந்திரத்தை சிறப்பாக கற்றுவைத்திருந்தனர். ஆனால், பேரம் பேசும் ஆற்றலை உரிமை சார் விடயங்களுக்கு உரிய வகையில் பயன்படுத்தவில்லை.மீண்டும், மீண்டும் அபிவிருத்திக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். மலையக மக்கள் வாழலாம், ஆனால், இங்கு நாங்கள்தான் ஆளவேண்டும் என்ற சிந்தனையும் அவர்களுக்குள் இருந்தது. இதன்காரணமாக சமூகமாற்றம் குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை.சந்திரசேகரன் தனி வீட்டுத் திட்டத்துக்கு அடித்தளமிட்டார். அதனை தொடர்ந்தும் இ.தொ.கா. உரிய வகையில் முன்னெடுக்கவில்லை.

நில உரிமை அற்றவர்களாகவே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்தனர். அவர்களை நில உரிமையாளர்களாக்குவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தத்துக்கு பதிலாக மாற்று பொறிமுறையை உருவாக்காமை.தேயிலை மலைகளுக்கு கொழுந்து பறிக்க செல்லும் பெண்களுக்கு தொழில் சார் பாதுகாப்பு இல்லை. மலசலகூட வசதியில்லை. பல பெண்கள் மாதாவிடாய் காலத்தில் செத்து பிழைக்கின்றனர்.

தோட்ட நிர்வாகங்களுடன் பேச்சு நடத்தி இதற்கான ஏற்பாடுகளை செய்ய அக்கறை செலுத்தவில்லை. அத்துடன், எவருக்காவது காயம் ஏற்பட்டால் முதலுதவி அளிக்ககூட எவ்வித சுகாதார ஏற்பாடுகளும் இல்லை. (இன்று அதற்பான பணிகள் இடம்பெற்றுவருகின்றமை பாராட்டக்கூடிய விடயமாகு) அதேபோல் பெருந்தோட்டப்ப குதிகளில் உள்ள தோட்ட வைத்தியசாலைகளில் மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்த வைத்தியர்கள் இல்லை.

மருத்துவ அதிகாரிகளே இருக்கின்றனர். இன்றும் பல இடங்களில் அந்நிலைமை தொடர்கின்றது. இதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய முன்வராமை. சட்ட ஏற்பாடுகள் செய்யவேண்டும், ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும் என்றெல்லாம் காரணம் சொல்பவர்கள், இவ்விடயங்களையும் நாடாளுமன்றத்தின் ஊடாக செய்திருக்கலாம் என்ற விடயத்தையும் கவனத்தில் கொள்க.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் தனி வீடுகள் அமைக்கும் திட்டத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி துரிதப்படுத்தியது. மலையக மக்களுக்கு காணி உரிமைக்கான பத்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டது. மலையக அபிவிருத்தி அதிகார சபையை உருவாக்கியது.

தோட்டப்பகுதிகளுக்கு அரச இயந்திரத்தின் அபிவிருத்திகள் செல்வதற்கு தடையாக இருந்த பிரதேச சபை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. பிரதேச செயலகங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.இப்படி உரிமைசார் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தொழிலாளர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டன.வெறும் நான்கரை வருடங்களில் முற்போக்கு கூட்டணியால் இவற்றை செய்ய முடிந்ததெனில் 2000 ஆம் ஆண்டு முதல் அமைச்சுப் பதவிகளை வகிந்துவந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு ஏன் சமூக மாற்றம் சார்ந்த விடயங்களை செய்ய முடியாமல்போனது என கேள்வி எழுப்படுகின்றது. உலகிலேயே பதவி உயர்வு இல்லாத தொழில்தான் தோட்டத் தொழிலாளி பணி. கட்டிளமை பருவத்தில் கூடை சுமக்கும் பெண்ணுக்கு கட்டையேறும்வரை அதே தொழில்தான்.

எவ்வித முன்னேற்றமும் இல்லை.இ.தொ.காவின் சேவைகளும்ஆறுமுகன் தொண்டமானின் வகிபாகமும்குடியுரிமை, வாக்குரிமை பெற்றுக்கொடுத்ததற்கு அடுத்தப்படியாக மலையகத் தமிழர்களை அரசாங்க ஊழியர்கள் கட்டமைப்பில் இணைத்து வைத்த பெருமை இ.தொ.காவையே சாரும். பட்டதாரி ஆசிரியர் நியமனம், உதவி ஆசிரியர்கள் நியமனம், தபால் ஊழியர்கள் என அந்த பட்டியல் நீள்கிறது.அத்துடன், ஶ்ரீபாத கல்வியல் கல்லுரிஉருவாக்கம், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் ஊடாக மலையக இளைஞர்களுக்கு தொழில் சார் பயிற்சி, கலாசார நிலையங்கள் ஊடாக பயிற்சிகள் போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம். அதேபோல் தொழிலாளர்களை ஒடுக்கிய சில தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.மலையகத்தில் தமிழர்களுக்கு எதிராக இனவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்ட பல சந்தர்ப்பங்களிலும் அவற்றை தடுத்து நிறுத்தி மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.இந்தியாவுடன் சிறந்த ராஜதந்திர உறவுகள் இருப்பதால் மலையகத்துக்கு 14 ஆயிரம் வீடுகள் பெறப்பட்டுள்ளன.

மலையக மாணவர்களுக்கு இந்தியாவில் பயிற்சிகள், புலமைப்பரிசில்கள் கிடைக்க வழிசமைத்துக் கொடுத்தமை. அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்ற பின்னர் என்றுமில்லாத துடிப்பு ஆறுமுகன் தொண்டமானிடம் காணப்பட்டது.மலையக பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கு குழு, அமைச்சரவைப் பத்திரம் பல பல விடயங்களை வேகமாக செய்தார். தோட்டப்பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்க பொறிமுறை வகுத்திருந்தார்.

அனைத்து வசதிகளுடனும் தனிவீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க வியூகம் அமைத்திருந்தார். ஆயிரம் ரூபாவை எப்படியாவது பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார்.ஆனால், அவரின் கனவுகள் மெய்பட முன்னர் காலன் அவர் உயிரை கொண்டுசென்றுவிட்டார்.ஆறுமுகன் தொண்டமான் இல்லாமல் 2020 பொதுத்தேர்தலை இ.தொ.கா. சந்தித்தது.

நுவரெலியா மாவட்டத்தில் மூவர் தெரிவாகக்கூடிய வாய்ப்பு இருந்தும் ஐந்து வேட்பாளர்களை கட்சி முன்னிறுத்தியதால் இருவர் மாத்திரமே இ.தொ.காவின் சார்பில் மொட்டு சின்னத்தில் வெற்றிபெற்றனர். ஒரு லட்சத்துக்கும் மேல் விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் தெரிவான தமிழ் எம்.பி. என்ற பெருமை ஜீவனை சார்ந்துள்ளது.இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பதவிக்கு இன்னும் எவரும் நியமிக்கப்படவில்லை. ஓராண்டு காலமாக தலைமைப்பதவி வெற்றிடமாகவே உள்ளது. பொதுச்செயலாளர் பதவி ஜீவன் தொண்டமானிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், தலைமைப்பதவி தொடர்பில் அக்கட்சிக்குள் குழப்பநிலை நீடிப்பதாலேயே இழுத்தடிப்பு இடம்பெற்றுவருகின்றது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தற்போதைய தகவலின்படி தலைமைப்பதவிக்கு இரு முனை போட்டி நிலவுகின்றது.

ஆறுமுகன் தொண்டமானின் மறைவானது இ.தொ.காவுக்கு பேரிழப்பாகும். அவரின் தலைமைத்துவம் இல்லாதமல் இ.தொ.கா. இன்னும் தேர்தலொன்றை சந்திக்கவில்லை. அவ்வாறு சந்தித்தால்தான் தற்போதைய கட்சி கட்டமைப்புமீது மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளதா அல்லது இல்லையா என்பது தெரியவரும்.

ஆர்.சனத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *